உதவி கல்விபணிப்பாளர் ஒருவரிடம் 35 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தை கடனாக பெற்றுக் கொண்டு அதை திருப்பி கெடுக்காமல் ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஆங்கில தனியார் பாடசாலை ஆசிரியை ஒருவரை மேலும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் பிரபுதிகா லங்காகனி திங்கட்கிழமை (26) பிறப்பித்ததாக நுவரெலியா நீதவான் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இரண்டாவது முறையாக (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்து. இதன் போது சந்தேக நபரான ஆசிரியைக்கு நேர்ந்தது என்ன என்று கேட்டறியப்பட்ட போது நீதிமன்ற பதிவாளர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நுவரெலியா கல்வி திணைக்களத்தில் ஆரம்ப கல்வி
பிரிவுக்கான உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய ஒருவரிடம் கடனாக 35 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்ட ஆசிரியை அவரிடம் உறுதி வழங்கியவாறு பணத்தை திரும்ப கையளிக்க மறுத்துள்ளதாக உதவி கல்வி பணிப்பாளர் நுவரெலியா குற்ற புலனாய்வு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
நுவரெலியா நானு ஒயா நகரில் தனியார் ஆங்கில முன்பள்ளி பாடசாலையை நடத்தி வந்த மாகாஸ்தொட்ட கஜபாபுர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஆங்கில மொழி கற்பிக்கும் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் மீதே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் குறித்த ஆசிரியைக்கு எதிராக வழக்கு பதிந்து அவரை கைது செய்து நீதவான் நீதிமன்றில் கடந்த (13.08.2024) ஆஜர்படுத்தியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதவான் சந்தேக நபரை (26.08.2024) வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.பின் இந்த வழக்கின் இரண்டாவது விசாரணை (26.08.2024) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது விசாரணையை மேற்கொண்ட நீதவான் குறித்த வழக்கின் சந்தேக நபரான ஆசிரியையையின் விளக்கமறிலை நீடித்து எதிர்வரும் (09.09.2024) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆ.ரமேஸ்.