வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்கள் கடந்த 9ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பிங்கிரிய கற்தூண் விகாரையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராய்வதற்கான கண்காணிப்புச் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அசோகப் பேரரசின் போது இந்திய வணிகர்களால் இந்த விகாரை நிறுவப்பட்டது என்று புராண வரலாறுகள் மூலம் தெரிய வருகின்றது. 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த கோயில் இரண்டாம் பேதீஸ் மன்னரின் ஆட்சியின் போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் எஞ்சியுள்ள 206 களிமண் கோயில்களில் களிமண் சுவர்களைக் கொண்ட மிகப் பெரிய கோயில் இதுவாகும். தற்போது, ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு விகாரைக்கு சொந்தமான நிலமானது, மன்னர்கால ஆட்சிகளின்போது தானமாக அளிக்கப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1864ம் ஆண்டு குறித்த நிலங்களின் உரிமை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அங்கீகரிக்கப்பட்டது.
தற்போது இந்த விகாரையின் பாதுகாப்பு, தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருவதுடன் , எதிர்காலத்தில் உள்ளூர் சுற்றுலா நடவடிக்கைகள், அருங்காட்சியகம் அமைக்கும் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது தொடர்பில் வடமேல் மாகாண ஆளுநர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் நேரில் பார்வையிட்டதுடன், விகாரையின் வரலாறு மற்றும் அங்கு புதையுண்டு கிடக்கும் புராதன மதிப்புகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் விகாராதிபதி ராஜகீய பண்டித படிவெல சோரத தேரரிடம் கேட்டறிந்து கொண்டார்.
ஆலயத்தின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளுக்கு தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் கௌரவ ஆளுநர் அவர்கள் அதன்போது குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் இந்திய பௌத்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.