விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

0
168

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார். தனது 81ஆவது வயதில் காலமானார்.

விக்கிரமபாகு கருணாரத்ன பற்றிய சிறு குறிப்பு 

இலங்கையின் தென்-கிழக்கே லுணுகலை என்ற இடத்தில் 1943ஆம் ஆண்டு பிறந்தவர் விக்கிரமபாகு கருணாரத்ன. இவரது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ஆவர். மத்துகமையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார்.

இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று மின்பொறியியலில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் பொதுநலவாயப் புலமைப் பரிசில் பெற்று கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் சென்று அங்கு 1970 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்று இலங்கை திரும்பி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

1978 ஆம் ஆண்டில் கண்டியில் அன்றைய இலங்கை அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். சில மாதங்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகம் ஆசிரியப் பணியில் இருந்து அவரை இடைநிறுத்தியது. அமைச்சரவைத் தீர்மானத்தை அடுத்து சில மாதங்களில் அவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.

1982 ஆம் ஆண்டில் அரசுத்தலைவர் தேர்தலை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக மீண்டும் பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டார். 2001 ஆம் ஆண்டில் மீண்டும் பதவியில் அமர்த்த அன்றைய உயர்கல்வி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பல்கலைக்கழக அதிகாரிகளுக்குக் கட்டளை அனுப்பியிருந்தாலும், அது நிறைவேற்றப்படவில்லை.

இறுதியில் 2015 ஆம் ஆண்டில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன அவரை மீண்டும் பல்கலைக்கழக ஆசிரியர் பதவியில் அமர்த்தி 1982 ஆம் ஆண்டு முதலான சம்பள நிலுவைப் பணத்தையும் செலுத்த உத்தரவிட்டார்.

அரசியலில் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட கருணாரத்தின பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் போது 1962 ஆம் ஆண்டில் இடதுசாரி லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்தார். 1972 இல் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனாலும், 1972 ஆம் ஆண்டில் சமசமாசக் கட்சி அன்றைய ஆளும் கட்சியாக இருந்த இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் குடியரசு அரசியலமைப்புக்கும் ஆதரவளித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைமையுடன் முரண் பட்டார். இதனை அடுத்து அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.

1977 ஆம் ஆண்டில் வாசுதேவ நாணயக்கார போன்ற முன்னாள் கட்சி அதிருப்தியாளர்களுடன் இணைந்து நவ சமசமாஜக் கட்சி (புதிய சமூக சமத்துவக் கட்சி) என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.

1983 தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு யூலை கலவரத்தை அடுத்து இலங்கை அரசு நவ சமசமாசக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைத் தடை செய்தது.
இதனை அடுத்து கருணாரத்தின, வாசுதேவ நாணயக்கார, ரோகண விஜயவீர உட்பட முக்கிய இடதுசாரித் தலைவர்கள் தலைமறைவாயினர். 1985 ஆம் ஆண்டில் இக்கட்சிகள் மீதான தடை நீக்கப்பட்டது.

1987 லங்கா சமசமாசக் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி, இலங்கை மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய சோசலிசக் கூட்டமைப்பு என்ற புதிய இடதுசாரி அரசியல் கூட்டணியை ஆரம்பித்தார்.

1988 ரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஒசி அபேகுணசேகராவுக்கு ஆதரவாக டிசம்பர் 2 இல் கொழும்புக்கு அருகில் கடவத்தையில் நடத்தப்பட்ட தேர்தல் கூட்டம் ஒன்றை மக்கள் விடுதலை முன்னணியினர் தாக்கியதில் கருணாரத்தின காயமடைந்தார்.

1987-89 ம.வி.மு கிளர்ச்சியின் போது பல இடதுசாரித் தலைவர்கள் ம.வி.மு கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டனர்.

1998 ஆம் ஆம் ஆண்டில் நவசமாசக் கட்சி வேறு சில இடதுசாரி சிறு கட்சிகளுடன் இணைந்து இடது விடுதலை முன்னணி (NLF) என்ற புதிய கூட்டணியை ஆரம்பித்தது.
2004 ஆம் ஆண்டு முதல் இக்கூட்டமைப்பு இடது முன்னணி என்ற பெயரில் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தகவல்- விக்கிபீடியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here