நுவரெலியா மாவட்டம் வட்டகொட, மடகொம்பரை, புதுக்காடு பிரிவில்
இந்திய – இலங்கை அரசுகளின் இணைந்த அபிவிருத்தித் திட்டமாக நல்லாட்சி காலத்தில் (2015-2020) அமையப் பெற்ற ‘இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கு’ ,
மலையகக் கல்வியாளர்- அரசியலாளர்- கலைஞர் – மலையக அமைப்பாக்கவாதி,
மடகொம்பரை (புதுக்காடு) மண்ணின் மைந்தன் அமரர் வி.டி.தர்மலிங்கம் அவர்களின் நினைவாக ‘வி.டி.தர்மலிங்கபுரம் (වී .ටී. ධර්ම ලිංග පුරම්
V. T. DharmalingaPuram) என பெயர் சூட்டும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிறு 16.06.2024 அன்று பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளது.
மடகொம்பரை புதுக்காடு தோட்டத்தில் பிறந்து ஒரு கல்வியாளராக உயர்ந்து தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றிய , அரசியல் செயற்பாட்டாளராக மலையக மக்கள் முன்னணி யின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராக உபலைவராகத் திகழ்ந்த , கலைஞரும் எழுத்தாளருமான வி.டி.தர்மலிங்கம் அவர்களின் பெயரைச் சூட்டுவதற்கு ஊர் மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகமும் இலக்கியவாதியுமான ‘சாகித்தியரத்ன’ மு.சிவலிங்கம் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வுக்கு மடகொம்பரை மண்ணின் மைந்தர்களான முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் ( தலைவர் – தொழிலாளர் தேசிய சங்கம்), பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் ( தவிசாளர் – இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) ஆகியோர் சிறப்பு அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மடகொம்பரை மண்ணின் மைந்தருமான மயில்வாகனம் திலகராஜா ( தலைமை ஒருங்கிணைப்பாளர் – மலையக அரசியல் அரங்கம்) ஊர் மக்களோடு இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார். இவரது பதவிக் காலத்திலேயே இந்தத் வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கூடவே வி.டி.தர்மலிங்கம் அவர்கள் மத்திய மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் (1995) அவரது நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட ‘V.T தர்மலிங்கம் நூலகத்தை’ யும் புனரமைப்பு செய்யவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நற்பணிகளில் ஆர்வம் உள்ளோரின் பங்களிப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இதே மடகொம்பரைத் தோட்டத்தில் இருந்து இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தை (1947-1952) சி.வி. வேலுப்பிள்ளை அவர்களும் இடைப்பட்ட காலத்தில் (1988 & 2005) எம்.எஸ்.செல்லச்சாமி அவர்களும் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களாக செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.