விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் வீரர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து விளையாடுவதும், இரசிகர்கள் மிக நேர்த்தியாக ஆடை அணிந்து போட்டிகளை கண்டுகளிப்பதையும் காணும்போது திருமண நிகழ்வே தனது ஞாபகத்தில் வருவதாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் அரை இறுதிக்கு தகுதி பெற்ற முதல் அரேபிய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற துனிஷியாவின் ஆன்ஸ் ஜபர் தெரிவித்துள்ளார்.
உலக டென்னிஸ் தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள துனிஷியாவின ஆன்ஸ் ஜபர் விம்பிள்டன் போட்டிகளில் அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
வரலாறு மற்றும் மரபுகளை தான் அதிகம் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள ஜபர்இ வெள்ளை நிற ஆடைகள் மற்றும் அனைவரும் ஸ்ரோபரிகளை சாப்பிடுவது ஒரு அற்புதமான சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரேன்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டிகளில் அபார திறமையை வெளிப்படுத்தி வருகின்ற ஜபர் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
தனக்கும் ரசிகர்களுக்கும் இடையே நல்ல தொடர்பு இருப்பது முக்கியம் எனவும்இ தான் டென்னிஸ் விளையாடுவதற்கு முக்கிய காரணம் அது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டென்னிஸ் போட்டிகளில் தான் விளையாடி இருக்காவிட்டால், தான் கால்பந்தாட்ட வீராங்கனையாக வலம் வந்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ள அவர், கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை கவர்ந்த வீரர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்காக தான் ரியல் மெட்ரிட் கழகத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள அவர், ரொனால்டோ எந்த கால்பந்தாட்ட கழகத்திற்கு விளையாடினாலும் அதனை ஆதரிக்க தான் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.