ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) 13 எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் அமர தீர்மானித்துள்ளனர். தாம் உள்ளிட்ட கட்சியின் 13 பேர் சுயாதீன குழுவினராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் அமர தீர்மானத்தை எடுத்துள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்றையதினம் ஸ்ரீ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்சியாக மக்களுக்கு தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதியை கட்சி நிறைவேற்றவில்லை என்பதாலும் மக்கள் சார்ந்த விடயங்களை மேற்கொள்ள தவறியுள்ளதாலும் தாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஒன்றிணைவு எனும் அடித்தாளம் ஆட்டம் காண்பதை கண்கூடாக காணக் கூடியதாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதனை சரி செய்ய வேண்டுமெனும் நிலையிலேயே தாங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இடைக்கால அரசாங்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து தேர்தல் நடாத்தப்பட வேண்டுமெனவும், ஜனநாயக சமூகத்திற்கு தேர்தல் அத்தியாவசியமாகும் என குறிப்பிட்ட அவர், மீண்டும் மக்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தங்களது பிரநிதிகளை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமண, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக கொடஹேவா, பேராசிரியர் குணபால ரத்னசேகர, உதயண கிரிந்திகொட, டிலான் பெரேரா, வசந்த யாப்பா பண்டார, கலாநிதி உபுல் கலப்பத்தி, கலாநிதி திலக் ராஜபக்ஷ, கே.பி.எஸ். குமாரசிறி
லலித் எல்லாவல ஆகியோர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளனர்.