ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெறவுள்ள இரகசிய வாக்கெடுப்பில் ரணில்தான் அதிக பெரும்பான்மை பெற்று அரச தலைவராக வருவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:.
அரச தலைவரை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 140 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவார்.
தனது முன்னைய கணிப்புக்கள் எதுவும் தவறியதில்லை. ரணில் அரச தலைவராக வருவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ரணில் தெரிவாவது 1,00 வீதம் உறுதி.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் பொதுஜன பெரமுன மற்றும் கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் நாட்டை அராஜகத்தில் இருந்து விடுவிப்பதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன்.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாட்டை அராஜகத்தில் இருந்து விடுவிக்க முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சியும் அங்கீகரித்த ஜனநாயகப் போராட்டத்தினால் தீப்பற்றி எரியும் நிலைக்குச் சென்றுள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளை எரித்து அரச சொத்துக்களை அழிக்கும் நடவடிக்கை தொடர்ந்தால் நாடே முற்றிலும் அழிக்கப்பட்டு விடும்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் கொள்கைகளை எவரும் தெளிவாக முன்வைக்காத நெருக்கடியான தருணத்தில் தெளிவாக வேலைத்திட்டத்தை முன்வைத்த ஒரே தலைவர் பதில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்றார் அவர்.