2024 ஜனாதிபதி தேர்தல் தெரிவில் இக்கட்டான நிலை ஏற்படுமா?

0
209
How is victory determined if a presidential candidate does not receive more than 50 percent of the vote?

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறாவிடின் வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படும்?

2, 3 ஆம் விருப்பு வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படும்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெறுவதற்கு, செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை கட்டாயம் பெற வேண்டும்.

சிலவேளை எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறாத சந்தர்ப்பத்தில் வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது பற்றிய பதிவே இது.

வேட்பாளர் எவரேனும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறாவிடின் ஜனாதிபதி தேர்தல் மறுபடியும் நடத்தப்படுமா என்ற கேள்வி சிலருக்கு இருக்கலாம். அவ்வாறு நடக்காது. ஏனெனில் வெற்றியை நிர்ணயிப்பதற்குரிய வழிமுறைகள் உள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் ரவி, ராஜா, ரோஜா, பூஜா மற்றும் அமல் உட்பட 39 பேர் போட்டியிடுகின்றனர் என வைத்துக்கொள்வோம்.

செல்லுபடியான மொத்த வாக்குகளில் (அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில், நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கழித்துவருவது)

ரவி – 45 %

ராஜா – 40 %

ரோஜா – 05 %

பூஜா – 03 %

அமல் – 02 %

வாக்குகளையும் பெற்றுள்ளனர் என எடுத்துக்கொள்வோம்.

அந்த வகையில் முதல் சுற்றில் எவரும் 50 % +1 வாக்குகளை பெறாததால் 2ஆம், 3ஆம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டே வெற்றி நிர்ணயிக்கப்படும்.

தேர்தலில் முதல் இரு இடங்களைப்பிடித்த ரவி, ராஜா ஆகியோரை தவிர ஏனைய 37 பேரும் போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள்.

அதேபோல ரவி, ராஜா ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குகளிலுள்ள 2, 3 ஆம் விருப்பு வாக்குகள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. ஏனைய 37 வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளே கருத்திற்கொள்ளப்படும். அந்த வேட்பாளர்களுக்கு ஒரு வாக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்தால் அந்த வாக்கும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
(அதாவது 1 அல்ல புள்ளடி இடப்பட்டிருந்தால்)

பூஜா என்பவருக்கு வாக்களித்தவர் தமது 2 ஆம் விருப்பு வாக்கை ரவி என்பவருக்கு வழங்கி இருந்தால் அந்த வாக்கு ரவி என்பவருக்கும், அவ்வாறு இல்லாது 2 ஆவது விருப்பு வாக்கை ராஜா என்பவருக்கு வழங்கியிருந்தால் அந்த வாக்கு ராஜா என்பவருக்கும் வழங்கப்படும்.

பூஜா என்பவருக்கு வாக்களித்தவர் தமது 2 ஆவது விருப்பு வாக்கை அமல் என்பவருக்கு வழங்கி இருந்தால், 3 ஆவது விருப்பு வாக்கு கவனத்தில் கொள்ளப்படும். மூன்றாவது விருப்பு வாக்கை ரவிக்கு வழங்கி இருந்தால் அந்த வாக்கு ரவிக்கு வழங்கப்படும். மாறாக 3ஆவது விருப்பு வாக்கை ராஜாவுக்கு வழங்கி இருந்தால் அது ராஜாவுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு 37 வேட்பாளர்களினதும் 2 ஆம் 3 ஆம் வாக்குகள் கவனத்தில்கொள்ளப்பட்டு எண்ணப்பட்ட பிறகு,

ரவி 47 சதவீத வாக்குகளையும், ராஜா 43 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர் என வைத்துக்கொள்வோம். இருவர் பெற்ற வாக்குகளையும் கூட்டி, அதில் 50 வீதத்துக்கும் மேல் பெற்றவர் வெற்றியாளராகக் கருதப்படும்.

அதாவது (47% + 43% ) 90 சதவீத வாக்குகளில் 45 சதவீதத்துக்கும் மேல் பெற்றவர் வெற்றிபெறுவார். அந்தவகையில் 47 சதவீத வாக்குகளைப் பெற்ற ரவி வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

சிலவேளை 2ஆவது வாக்கெண்ணும் பணியின்போது ராஜாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கப்பெற்றால் அவர் வெற்றியாளராகக் கருதப்படுவார்.

ஏனைய 37 வேட்பாளர்களுக்கு முதல் வாக்கை பயன்படுத்திய வாக்காளர்கள், ரவி மற்றும் ராஜா ஆகியோருக்கு 2 ஆம் 3 ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்தி இருக்காவிட்டாலும் ரவியே வெற்றிபெற்றவராகக் கருதப்படுவார்.

2 ஆம் 3 ஆம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் ரவி மற்றும் ராஜா ஆகியோர் சமனான வாக்குகளைப் பெற்றிருந்தால் திருவுளச் சீட்டுமூலம் வெற்றி நிர்ணயிக்கப்படும்.

ஆர்.சனத்
[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here