இலங்கையில் ‘செனட்’ சபை முறைமையை இல்லாதொழிக்காமல் இருந்திருந்தால், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அரசமைப்புக்குள் உள்வாங்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்திருக்காது – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதத்தை நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
” எமது நாட்டில் 1947 ஆம் ஆண்டு அரசமைப்பில் ‘செனட் சபை’ முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பில் அந்த முறைமை இல்லாமல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் 1978 ஆம் ஆண்டு யாப்பில் , தேசியப்பட்டியல் ஊடாக 29 பேர் நாடாளுமன்றம் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
புத்திஜீவிகள், நிபுணர்கள், தேர்தலில் போட்டியிட முடியாத நாட்டுக்கு தேவையானவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு தேசிய பட்டியல் ஊடாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன் நோக்கம் ஓரளவு நிறைவேறினாலும், தேசியப்பட்டியல் முறைமை கொண்டுவரப்பட்டதன் முழுமையான நோக்கம் நிறைவேறவில்லை. ” – எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
” இலங்கையில் நல்லிணக்கம் இல்லாமல் போனதற்கு செனட்சபை முறைமை நீக்கப்பட்டதும் பிரதான காரணமாகும். செனட் சபையில் அனைத்து இன பிரதிநிதிகளும் இருந்தனர். அவர்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். எனவே, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. சிறுபான்மை இன மக்களும் தமக்கு பாதுகாப்பாக அந்த முறைமையை நம்பினர். செனட் சபையிலும் தகுதியானவர்கள் இருந்தனர்.
அந்த முறைமை இல்லாதாதாலேயே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை, இலங்கை அரசமைப்புக்குள் உள்வாங்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்தது.
நாடாளுமன்றத்துக்கு மேலாக இருந்த செனட் சபையை இல்லாது செய்ததால், நாடாளுமன்றத்துக்கு கீழான மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, அரசமைப்பு மறுசீரமைப்பு எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசமைப்பு சார்ந்த பிரச்சினையாலேயே இந்நாட்டில் நல்லிணக்கம் இல்லாமல் போனது, மோதல்கள் ஏற்பட்டன. ” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் கலைப்பு!
அதேவேளை, நான்கரை வருடங்களில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்ற சரத்து 19 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்தது. 20 ஆவது திருத்தச்சட்டத்தில் அந்த கால எல்லை இரண்டரை வருடமாக்கப்பட்டது. அதில் மாற்றம் செய்யவில்லை. 22 இலும் இரண்டரை வருடம் என்றே உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 113 பேர் இணைந்து தீர்மானமொன்றை நிறைவேற்றி, நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரலாம். அந்த ஏற்பாட்டிலும் கைவைக்கவில்லை என்ற தகவலையும் நீதி அமைச்சர் வெளியிட்டார்.
இரட்டை குடியுரிமை
இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் ஏற்பாடு 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
” இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்ககூடாது என்பதே மக்களின் கருத்தாக இருந்தது. அந்தவகையில் தடைவிதிக்கும் ஏற்பாடு 19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்வாங்கப்பட்டது. அந்த ஏற்பாடு 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நீக்கப்பட்டது. தற்போது 22 ஊடாக மீண்டும் அமுலுக்கு வருகின்றது.
எவராவது நாட்டுக்கு சேவை செய்ய விரும்பினால் இலங்கை பிரஜையாகவே அதனை செய்ய முடியும் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மொட்டு கட்சி எம்.பிக்கள் ஆதரவு
” அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படும். அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.” – என்று ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தமது ஆதரவை மொட்டு கட்சி உறுப்பினர்களான அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஹிந்தானந்த அளுத்கமகே, பிரேம்நாத் சி தொலவத்த ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
22 தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
ஆர்.சனத்