நேபாளத்தின் பிரபல சுற்றுலா பதையில் 22 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த விமானம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 19 பயணிகள் மற்றும் மூன்று விமான ஊழியர்களுடன் புறப்பட்ட டாரா ஏயார் விமானம் நடுவானில் தொடர்பை இழந்துள்ளது.
‘பொகாராவில் இருந்து ஜொம்சம் நகரை நோக்கி புறப்பட்ட உள்ளுர் விமானம் தொடர்பை இழந்தது’ என்று டாரா ஏயார் பேச்சாளர் சுதர்ஷன் பார்டவுலா தெரிவித்தார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் தொடர்பு இழந்துள்ளது. விமானம் கடைசியாக தொடர்பில் இருந்து பகுதிக்கு ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள இராணுவத்தினரும் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜொம்சம் மலைப் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை காணப்பட்டதோடு, விமானம் திட்டமிட்ட நேரத்தில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்தப் பயணப்பாதை மலையேறிகளுக்கு பிரபலமானதாகும். அதேபோன்று இந்தியர் மற்றும் நேபாளிகள் முக்தினாத் கோயிலுக்கு செல்வதற்கு இந்தப் பயணப் பாதையை பயன்படுத்துகின்றனர். காணாமல்போன விமானத்தில் நான்கு இந்தியர்கள் மேலும் இரு வெளிநாட்டவர்கள் இருந்துள்ளனர்.