எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவில் உள்ளடங்கும் சார்ஜன்ட் ஒருவர் மீது, அதே நிரப்பு நிலைய பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ குழுவுக்கு தலைமை தாங்கும் இராணுவ லெப்டினன் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பொலிஸ் சார்ஜன்ட் படுகாயமடைந்துள்ளார்.
வரகாபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்மலதெனிய பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
சம்பவத்தில், படுகாயமடைந்த வரகாபொல பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு கடமையில் ஈடுபடும் பொலிஸ் சார்ஜன்ட் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இன்று ( 23) சந்தேக நபரான போயகனே இராணுவ முகாமின் லெப்டினன்ட் வரக்காபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டள்ளதாவது,
வரக்காபொல தும்மலதெனிய எரிபொருள் நிரப்பு நிலைய பாதுகாப்புக்கு, வரகாபொல பொலிஸ் நிலையத்தில் இருந்து இருவர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் போயகனே இராணுவ முகாமின் லெப்டினன்ட் ஒருவரின் கீழான நால்வர் கொண்ட குழுவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ( 22) இரவு, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக கொழும்பு – கண்டி ஏ 1 பிரதான வீதியில் வாகன நெரிசலுடன் கூடிய நிலைமை உருவாகியுள்ளது.
இதன்போது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் தலையிட்டு வாகன நெரிசலை சீர்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது அங்கிருந்த இராணுவ லெப்டினன்ட், சார்ஜனுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு அவரது கடமையை முன்னெடுக்க விடாது தடுத்து அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார். இந்நிலையிலேயே பொலிஸ் சார்ஜன்ட் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.