அதிர்ஷ்டலாப சீட்டில் ஏழரை கோடி ரூபாய் வென்றதாகக் கூறப்படும் அக்குரனை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒரு வரை கடத்தி கம்பளை ரத்மல்கடுவ பிரதேச வீடொன்றில் நான்கு பேர்கொண்ட குழுவினரால் பத்து நாட்களாக சிறைவைத்து தாக்கப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இடம் பெற்றுவந்த வழக்கு விசாரணைகளின் மேற்குறிப்பிட்ட கடத்தல் முறைப்பாடு பொய்யானது என நிரூபணமானதால் பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் பொய்யான முறைப்பாடு செய்த நபருக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறும் கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் காஞ்சனா பொடிதுவக்கு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்
மேற்குறிப்பிட்ட முறைப்பாடானது கடந்த 2023.08.07 அன்று அக்குரனை மல்வாஹின்னயைச் சேர்ந்த மொஹமட் இர்ஷாட் என்பவரினால் கம்பளை பொலிஸ் நிலைய விஷேட குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்டது.
முறைப்பாட்டுக்கமைய உயரதிகாரிகளை கொண்ட விஷேட பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் காமினி கல்யாணரட்ன என்ற பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு மேற்குறிப்பிட வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வந்தன
விசாரணைகளில் பிரதான சந்தேக நபருக்கும் முறைப்பாட்டாளருக்கும் நீண்ட காலமாகவே பண கொடுக்க வாங்கல் இடம் பெற்று வந்திருந்த நிலையில் அதிஷ்ட லாப சீட்டிழுப்பில் வென்ற பின்னர் முறைப்பாட்டார் குறிப்பிட்ட பணத்தை பெற்றுகொள்ள ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்யவேண்டியுள்ளமையால் அதனை ஏற்பாடு செய்து தருமாறு கோரியதையடுத்து சந்தேக நபர் தனது வீடு மர ஆலை என்பனவற்றின் உறுதியை அடமானம் வைத்து 90 இலட்சம் ரூபாய் கொடுத்ததுள்ளமையும்
மேலும் முறைப்பாட்டில் தான் தம்புள்ளையில் வைத்து கம்பளை பகுதிக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்டதாக கூறப்பட்டிருந்த பொழுதும் முறைப்பாட்டாளர் வாகனத்தை வரவழைத்து சந்தேக நபர்களுடன் அலவத்துகொட பிரதேசத்திலிருந்து வாகனத்தில் தானாகவே ஏறிவந்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட் டுள்ளதாகவும் மேற்படி நபர் சந்தேக நபரிடம் பெற்றுகொண்ட பணத்தை திருப்பி கொடுக்காமல் இருப்பதற்காக பொய்யாக செய்யப்பட்ட முறைப்பாடு எனவும் கம்பளை பொலிஸ் நிலைய விஷேட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி குமுது குமார நீதிமன்றில் ஒப்புவித்திருந்தார்.
இதேவேளை முறைப்பாட்டாளருக்கு எதிராக சந்தேக நபரினால் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட பிரிதொரு வழக்கில் மேற்குறிப்பிட்ட 90 இலட்சம் ரூபாவில் 10 இலட்சம் ரூபாய் கொடுத்துள்ளதோடு மீதி 80 இலட்சம் ரூபாவினை ஜுலை மாதம் 25 ஆம் திகதி கொடுப்பதாகவும் நீதி மன்றில் உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடதக்கது