மின்சார வேலியில் சிறுத்தையொன்று சிக்கி உயிரிழந்துள்ளதையடுத்து பண்ணையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து குறித்த பண்ணையின் உரிமையாளர், இறந்த சிறுத்தையின் உடலை நேற்று (21) வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புதைத்துள்ளார்.
போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து (22) நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் சிறுத்தையின் சடலத்தை மீட்டதுடன், சிறுத்தையை கொன்ற சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர் ஆடு மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வருவதாகவும், சிறுத்தை, கோழிகளை வேட்டையாட வருவதால் கோழி மற்றும் ஆடுகளை சிறுத்தையிலிருந்து காப்பாற்றுவதற்காக பண்ணையில் மின்சார வயர்களை இட்டுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஹட்டன் நீதவான் உத்தரவின் பிரகாரம், 4 வயதுடைய இறந்த சிறுத்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
– எஸ்.சதீஸ்