அரசியல் கைதிகள் விடுதலை என்ற கோஷத்தில் ‘தமிழ் கைதிகளுக்கு’ முதலிடம் இருக்க வேண்டும்

0
375

காலிமுக போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம், அரசியல் கைதிகள் விடுதலை,  மனித உரிமை பேணல், மக்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை நாம் ஏற்கிறோம். இவை எங்களதும் நீண்டகால கோரிக்கைகள்தான். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதில் 10, 15, 20 வருடங்களாக சிறையில் இருந்து, தம் வாழ்வையே இழந்து நிற்கும் தமிழ் அரசியல் கைதிகள் முதலிடம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டால் எமது கட்சி உங்களுடன் ஒத்துழைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  எம்.பி தெரிவித்துள்ளார்.

காலிமுக போராட்டக்கார இயக்கத்தினர் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் நடத்திய கலந்துரையாடலில் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்ட மனோ எம்பி மேலும் கூறியதாவது,  

ரணில் இன்று ஜனாதிபதி. அவருடன் அரசியல் காரணங்களுக்காக எதிரணி என்ற முறையில் நாம் முரண்படலாம். முரண்பாடுகள் உள்ளன. ஆனால், அவர் சட்டப்படித்தான் ஜனாதிபதி ஆகியுள்ளார். இடைக்கால ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத்தில்தான் தெரிவு செய்யப்பட முடியும் என சட்டம் கூறுகிறது. அதன்படி அவர் 134 வாக்குகளை பெற்று அவர் ஜனாதிபதி ஆகியுள்ளார்.  தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பீக்கள் மாற்று வேட்பாளருக்கு வாக்களித்தோம். அது எம் அரசியல் கொள்கை நிலைப்பாடு. ஆனால், ரணில் இன்று ஜனாதிபதி.

இன்றைய பாராளுமன்றம் மக்களின் மனவுணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. வெளியே மக்கள் மத்தியில் தேர்தல்  நடந்திருந்தால், முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆகவே இயன்றவரை சீக்கிரம் புதிய ஒரு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு, புதிய மக்கள் ஆணை பெறப்பட்டு, புதிய பாராளுமன்றம் அமைய வேண்டும். ஆகவே சீக்கிரம் “புதிய ஒரு பாராளுமன்ற தேர்தல் தேவை”, என்பதையும் மேலதிக ஒரு கோஷமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

இங்கே என்னருகில் அமர்ந்து இருக்கும் முன்னிலை சோஷலிச கட்சி நண்பர் புபுது ஜாகொடவின் கட்சி பொது செயலாளர், குமார் குணரத்தினம் பாராளுமன்றத்துக்கு வெளியே “மக்கள் சபை” அமைய வேண்டும் என கூறுகிறார். எம்மை பொறுத்த அளவில், பாராளுமன்றம்தான் இன்று இந்நாட்டில் உள்ள மிகப்பெரும் “மக்கள் சபை”. அந்த பாராளுமன்றத்தை எரிக்க முடியாது.  ஆகவே அதை தேர்தல் மூலம் கைப்பற்றுங்கள்.

நேற்று மாலை, ஜனாதிபதி ரணில், எமது கட்சிக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்தில் தேசிய அரசு, அமைச்சர் பதவிகள் பற்றி எதுவும் இல்லை. நாடு இன்று எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதார, சமூக சவால்களை சந்திக்க தேசிய கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள எம்மை அவர் அழைத்துள்ளார்.

இதுபற்றி நமது கட்சி அரசியல் குழு முடிவு செய்யும். ஆனால், நாம் இந்த தேசிய கலந்துரையாடலுக்கான அழைப்பை சாதகமாக பரிசீலிப்போம். போராட்டக்காரர்கள் மீதான,  ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்ட பயன்பாடு, பயங்கரவாத தடை சட்ட பயன்பாடு ஆகியவற்றை நிறுத்துங்கள் என நாம் அவரை சந்தித்து கோருவோம். இதுதான் ஜனநாயக கதவுகளை திறக்கும், தடைகளை நீக்கும் தேசிய கலந்துரையாடல். அதை அவருக்கு எம்மால் சொல்ல முடியும்.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கைதான். அதையும் நாம் ஜனாதிபதி ரணிலிடம் சொல்வோம். உங்கள் கோரிக்கை பட்டியலில் 10, 15, 20 வருடங்களாக சிறையில் இருந்து, தம் வாழ்வையே இழந்து நிற்கும் தமிழ் அரசியல் கைதிகள் முதலிடம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டால் உங்களுடன் எமது கட்சி உங்களுடன் ஒத்துழைக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here