டினர் திரவத்தை திருடிய மாணவனை ஆசிரியரிடம் காட்டி கொடுத்ததாக சந்தேகித்து தம்மை காட்டிகொடுத்த சகமாணவனை பழிவாங்குவதா கூறி வகுப்பறைக்குள் வைத்து திரவத்தை பற்றவைத்து குறித்த மாணவன் மீது வீசி தீ வைத்துக் கொளுத்தியதாக கூறப்படும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மூவரை, கம்பளை குருந்துவத்த பொலிஸார் சனிக்கிழமை (15) பொறுப்பில் எடுத்து விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்
கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட (சிங்கள மொழி மூல) யடபான ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்றுவந்த குறுந்துவத்தை உடஹேன் தென்ன வீராத்தோட்டத்தைச் சேர்ந்த திருச்செல்வம் செல்வகுமார் என்ற 14 வயது மாணவனுக்கே மேற்படி துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது
மேற்படி சம்பவமானது கடந்த 13.02. .2025 அன்று நடைப்பெற்றிருந்த போதும் ஒரு மாதம் கடந்து சனிக்கிழமை (15.03.2025) மாலையே தீவைத்த மாணவர்களை பொலிஸார் விசாரணைக்காக பொறுப்பில் எடுத்துள்ளனர்.
சம்பவதினம் குறித்த வகுப்பின் ஆசிரியை விடுமுறையில் இருந்ததாக தெரிய வருகிறது. இந் நிலையில் வகுப்பறையில் இருந்த டினர் திரவத்தை மூன்று மாணவர்கள் திருடி மலசல கூடம் அமைந்துள்ள பகுதியில் தீ மூட்டி விளையாடியதாகவும் . அதில் ஒரு மாணவன் போத்தல் ஒன்றில் திரவத்தை ஊற்றி தனது பைக்குள் ஒழித்து வைத்து கொண்டுள்ளார். மேற்படி சம்பவம் விசாரணைக்கு வந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாணவர்களை அடையாளம் காட்டியமைக்கு பழிவாங்கும் விதமாக அதே வகுப்பைச் சேர்ந்த பத்து மற்றும் பதினொரு வயதுடைய மூன்று மாணவர்கள், வகுப்பறையில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் கொள்கலனில் டினர் திரவத்தை ஊற்றி, தீ வைத்து, குறித்த மாணவன் மீது வீசி, பழிதீர்க்க முயன்றதில் கால்களில் தீப்பற்றியதையடுத்து குறித்த மாணவன் வேதனையில் அலறிக்கொண்டு பிரிதொரு வகுப்பிற்க்குள் .ஓடியதையடுத்து அங்கிருந்த ஆசிரியை பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார் இதன் போது பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் குறுந்து வத்தை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை போதனாவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
மேற்படி கொடிய சம்பவத்தினை பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்களும் இணைந்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளாது வகுப்பறையில் உள்ள புத்தர் சிலைக்கு வைக்கப்பட்ட விளக்கு தவறி கீழேயிருந்த டினர் திரவ டப்பாவிற்குள் வீழ்ந்து தீப்பிடித்ததாகவும், இதனால் மாணவன் மீது தீப்பற்றியதாகவும் ஆசிரியர்கள் கூறி உண்மையினை மூடி மறைத்துள்ளனர் மேலும் ஐந்து நாட்களாக மருத்துவமனையில் இருந்த குறித்த மாணவன் நடந்த உண்மையினை பொலிசாரிடம் வாக்குமூலமாக கூறியிருந்தாலும் , அதில் யாரும் உரிய கவனம் செலுத்தியிருக்கவில்லை.
.பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார், குறுந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், மேலும் இந்த சம்பவத்தால் தனது குழந்தையின் கற்றல் நடவடிக்கைகள் ஒரு மாதமாக தடைபட்டுள்ளதோடு , ஆறாத மகனின் காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு அதிக செலவில் முச்சக்கர வண்டியில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும், இந்த சம்பவத்திற்கு சரியன நீதியை கோருவதாகவும் கூறுகிறார்.
சிறிய வயது மாணவர்கள் இருந்த இடத்தில் ஆபத்தான எரியக்கூடிய திரவங்கள் வைக்கப்பட்டிருப்பது குறித்தும், சம்பவத்தை மறைக்க முயற்சித்தது குறித்தும் விசாரிக்க நாம் பாடசாலையின் அதிபர் நிலந்தி பிரதீபிகாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல தடவைகள் முயன்ற போதிலும், ஊடகவியாலாளர்கள் என்று அறிந்துகொண்டதும் தொலைபேசியை துண்டித்துவிட்டார்.
குருந்துவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் சரத் விஜேசிங்க,மேற்படி சம்பவம் குறித்து கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் புகார் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார், மேலும் சிறார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை பெறுவதற்காக காவல்துறை சட்டப் பிரிவுக்கு சம்பவத்தினை பரிந்துரைத்துள்ளார்.
எஸ்.சேகர்