10வது சர்வதே சயோகாதினத்தை முன்னிட்டு சிவவிஷ்ணு யோகாபீடம், இலங்கை, இந்திய தேசிய யோகாசான சம்மேளனம் மற்றும் சர்வதேசயோகாசன பேரவை, சர்வதேசவிளையாட்டு மற்றும் யோகா பேரவை ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஒழுங்குசெய்யப்பட்டு அண்மையில் கொழும்பில் நடைபெற்ற முதலாவது ஆசியயோகாசன போட்டி – 2024 ((1st Asian Yoga Championship Competition – Sri lanka 2024))யில் மலையகத்தைச் சேர்ந்த திருமதி. தவமணி தேவராஜா 51 முதல் 60 வயதிற்குற்பட்டபிரிவில் போட்டியிட்டுதங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இவ்வாறு பதக்கம் பெற்றது பற்றியும் யோகக்கலையில் அவருக்கான ஆர்வம் பற்றியும் கேட்ட போது அவர் பகிர்நந்துகொண்டவை …
நான் தவமணி தேவராஜா, தகவலை மேற்பிரிவு ஆறுமுகம் மீனாட்சி எனது பெற்றோர், எனக்கு 6 சகோதர சகோதரிகள், வறுமை காரணமாக எனது கல்வியை தரவளை தமிழ் வித்தியாலயத்திலும், ஹைலன்ஸ் கல்லூரியிலும் கற்றாலும் கல்வியை தொடர முடியாமல் போனது. சிறுவயதிலேயே நிறைய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மாகாண அளவில் வெற்றிப்பெற்றுருக்கின்றேன், குடும்ப வறுமை, ஊக்குவிக்க யாரும் இல்லாத காரணத்தால் அதற்குமேல் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.
1985ல் திருமணம், அடுத்து 3 குழந்தைகள் மகள் பட்டதாரி ஆசிரியை, மூத்த மகன் வங்கி உத்தியோகத்தர் இளைய மகன் வாகன இயக்குனர், 5 பேரப்பிள்ளைகள். இவ்வாறு எனது வாழ்க்கை ஓடியது. யோகாசனம் சாதாரணமாக செய்ய ஆரம்பித்து எனது பிள்ளைகள் மற்றும் மருமக்களின் உந்துதலால் தான் நான் இந்த அளவு சாதிக்க முடிந்தது.
பத்தாவது வருடமாக ஆசிய ரீதியில் நடத்தப்பட்ட யோகா போட்டியில் பதக்கத்தை வென்று இருக்கின்றீர்கள் இது பற்றிய உங்களது உணர்வு எத்தகையது?
சிறு வயதிலிருந்தே ஏதாவது துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது ஏக்கம், யோகா செய்ய ஆரம்பித்து சமீபத்திய காலங்களில் யோகாசனம் செய்து சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன், இந்த போட்டியை பற்றிமகன் மூலமாக தெரியவந்தது. பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை இருந்தாலும் தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதுவும் உங்களது பேரனுடன் இணைந்து நீங்கள் வெற்றி பெற்று இருக்கின்றீர்கள் இந்த உணர்வை எவ்வாறு இருக்கின்றது
பேரனுடன் சேர்ந்து வெற்றி பெற்றது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. உண்மையில் பேரன் மட்டக்களப்பில் சக்தி ஆனந்த யோகா பாடசாலையில் தான் யோகா பயில்கிறார். அவருடைய யோகா ஆசிரியை மூலமாகத்தான் எனக்கு இந்த போட்டி பற்றி அறியமுடிந்தது. பேரன் கிரண்கேஷவ் 5வயது பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொண்டார்.
யோகா இது உங்களது நீண்ட கால பயணத்தில் ஒன்றா அல்லது இடையில் நீங்கள் கற்றுக் கொண்டதா? நீண்ட காலமாயின் இப்போதைய ஏன் சாதனை புரிய வேண்டும் என்று நினைத்தீர்கள் ?
யோகா நான் செய்ய ஆரம்பித்து கிட்டத்தட்ட 12 வருடங்களே ஆகின்றன. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன் எனக்கு தைராய்டு பிரச்சனை இருந்தது, உடல் பருமனும் மிகவும் அதிகரித்திருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உடல் பருமன் குறைப்பதற்கு யோகா செய்வது பற்றி அறிந்து கொண்டேன். மருந்து அதிகம் அருந்தி கஷ்டப்பட்ட நான் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு யோகா செய்ய ஆரம்பித்தேன்.
யோகாவின் மூலம் நீங்கள் உணர்வது என்ன ? யோகாசன பயிற்சியில் ஈடுபடும் போது நீங்கள் உணர்வது என்ன?
யோகா ஆத்மார்த்தமாகச் செய்யும் போது அந்த தெய்வீக உணர்வை நான் உணர்கிறேன். ஒவ்வொரு ஆசனங்களையும் செய்யும்போதும் அந்த ஆசனத்துடன் மனதார உரையாடுகின்றேன், உதாரணத்திற்கு சர்வாங்க ஆசனம் என்னும் ஓர் ஆசனம் இருக்கிறது. அதை செய்யும் போது சர்வாங்க ஆசனமே உனை செய்யும் போது இந்த ஆசனத்திற்கான பூரண பலனும் எனக்கு கிடைக்கவேண்டும். பிழை இல்லாமல் செய்ய வேண்டும் என்று மனதிற்குள். கூறிக் கொள்வேன். அப்போது அந்த ஆசனத்தை பூரணமாக அனுபவிக்க முடியும். நான் அதிகமாக புத்தகங்கள் மூலமாகவும், தொலைக்காட்சி யோகாசன நிகழ்ச்சிகள் மூலமாகவும் தான் கற்றுக்கொண்டேன். உடல் முழுமையாக ஆரோக்கியமாக மாறும், எப்போதும் நேர்மறையான அதிர்வுகள் எம்மை சுற்றிலும் இருப்பதை உணரலாம்.
உடல் உளரீதியான மாற்றங்கள் அல்லது தாக்கங்கள் அல்லது பாதிப்புகள் ஏதேனும்?
நிச்சயமாக, அதிலும் குறிப்பாக என்னைப் போன்றவர்களுக்கு இதை கற்றுக்கொடுக்க ஆசைப்படுகின்றேன். கூடிய விரைவில் தவம் யோகா நிலையம் என்ற யோகா பாடசாலை ஆரம்பிக்க இருக்கிறேன். 3 வயது முதல் 70 , 80 வயது வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். தற்காலத்தில் காணப்படும் அவசரகால வாழ்க்கை முறையில் நமது உடம்பை இந்த வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள கூடிய விதத்தில் மாற்றியமைக்க யோகா மிகவும் அவசியம். மருத்துவ செலவை குறைத்து ஆரோக்கியமாக வாழ யோகா மிகவும் அவசியம். தினமும் ஒரு அரை மணி நேரம் போதும், அது முழு நாளுக்கான சக்தியை வழங்கும்.
தங்களது யோகா வகுப்புக்கள் எவ்வாறு அமையும்?
3 வயது முதல் முதியோர் வரையான அனைவருக்கும் வகுப்புக்கள் காணப்படும். கர்ப்பிணி களுக்கான யோகாசனங்கள், முதியோர் களுக்கான யோகாசனங்கள், குறிப்பிட்ட நோய்களுக்கான ஆசனங்கள், மற்றும் முத்திரைகள் என எனது வகுப்புக்கள் அமையும்.
யோகா வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு யாரும் உதவி செய்கிறார்களா?
ஆம், யோகா ஆசிரியர்களுக்கான சான்றிதழ் பயிற்சி வழங்கும் ஆசிரியர் ஒருவர் எனக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளார், அதன்மூலம் யோகா கற்பிக்கும் போதான முறைகளை மேலும் மெருகூட்டி கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
யோகாவில் இன்னும் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்?
ஆசிய அளவில் வெற்றிபெற்றாலும் இன்னும் சர்வதேச அளவிலும் தங்கம் வெல்ல வேண்டும். மலையகத்தில் யோகாசனத்தை எல்லா இடங்களிலும் அறிமுகம் செய்து யோகாசனப்போட்டிகளில் மலையகம் சார்ந்த பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். நாம வருத்தம் நோய் எதும் வந்தால் பிள்ளைகள் கஷ்டப்பட்டு விடுவார்கள் என்று பயந்துதான் நான் என்னை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வழி தேடினேன். தைராய்டு பிரச்சனை உடல் பருமனால் அவதிபட்டேன், யோகாசனம் இது எல்லாவற்றுக்கும் தீர்வாக இருந்தது. என்னைப் போன்ற தாய்மார்களுக்கு இதைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன். யோகாவின் மூலம் நான் சாதிக்க நினைப்பது இதுதான்.
நன்றி தமிழன் – ‘தமிழ்முரசு’ பத்திரிகை