7 ஆடுகள் ஒரு வளர்ப்பு நாய் திடீரென உயிரிழப்பு

0
62

 கால்நடை பண்ணையொன்றில் 7 ஆடுகள் ஒரு வளர்ப்பு நாயொன்று திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை கால்நடை வைத்திய அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தலவாக்கலை ஹொலிரூட் ரத்னில்கல வீடமைப்பு திட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன் தினம் (16) தனது பண்ணையில் நான்கு ஆடுகள் உயிரிழந்ததாகவும், நேற்று (17) மேலும் மூன்று ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பண்ணையின் உரிமையாளர் ரொபர்ட் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாயும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆடுகள் வைக்கப்பட்டிருந்த பண்ணையின் பின்பகுதி இடிக்கப்பட்டுள்ளதாகவும், சில குழுவினரோ அல்லது நபர்களோ கால்நடைகளுக்கு விஷத்தை கொடுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பண்ணையின் உரிமையாளர் ரொபர்ட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த மூன்று ஆடுகள் நேற்று (17) பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் உடல் பாகங்கள் மேலதிக விசாரணைக்காக நுவரெலியா மற்றும் பேராதனை கால்நடை மருத்துவப் பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை கால்நடை வைத்திய அலுவலகத்தின் கால்நடை வைத்திய அதிகாரி சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனங்கள் நடத்தும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தேவை ஏற்படின் கால்நடைகளின் சம்பந்தப்பட்ட பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை மேலதிக பரிசோதனைகளுக்காக அரச இரசாயன பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கால்நடை வைத்திய அதிகாரி சுரேஷ்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தலவாக்கலை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here