99 சிறார்கள் இறந்ததையடுத்து, அனைத்து வகையான சிரப் (Syrup) மற்றும் திரவ மருந்துகளை தான் தடை செய்துள்ளாக இந்தோனேஷிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்வருடம் ஜனவரிமாதம் முதல் இந்தோனேஷியாவில் சிறார்களில் கடுமையான சிறுநீரக நோய்கள் (AKI) அதிகரித்ததையடுத்து இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆபிரிக்க நாடான காம்பியாவில், இந்தியத் தயாரிப்பான 4 சிரப் மருந்துகளை உட்கொண்ட சுமார் 70 சிறார்கள் இவவருட முற்பகுதியில் இறந்தமை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இத்தடை அமுலுக்கு வந்துள்ளது.
எனினும், காம்பியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சிரப் பமருந்துகள், இந்தோனேஷியாவில் கிடையாது என இந்தோனேஷிய உணவு மற்றும் ஒளடதங்கள் முகவரம் தெரிவித்துள்ளது.
இன்றுவரை 20 மாகாணங்களில் 206 நோயாளர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களில் 99 பேர் இறந்துள்ளனர் என இந்தோனேஷியாவின் சுகாதார அமைச்சின் பேச்சாளர் சியஹ்ரில் மன்சுய்ர் புதன்கிழமை (19) தெரிவித்துள்ளார்.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எந்த திரவ மற்றும் சிரப் மருந்துகளையும் பரிந்துரைக்க வேண்டாம் என, அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் தற்காலிகமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் 18 வயதுக்குட்பட்டவர்கள், பெரும்பாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என இந்தோனேஷிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.