அரசியல், தொழிற்சங்க ரீதியாக மலையக மக்கள் பிரிந்து நின்று எதையும் சாதித்து விடவில்லை. எதிர்காலத்தில் அவர்களை ஒற்றுமை படுத்தி வழிநடத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசியல் தலைமைக்கும் இருக்கின்றது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு முறை மத்திய மாகாண சபை உறுப்பினராகவும், இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதியமைச்சராகவும் கெபினட் அமைச்சராகவும் பதவி வகித்து மூன்றாவது பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். நான் 2015 முதல் முழு அதிகாரம் கொண்ட அமைச்சராக 4 ½ வருடங்கள் பதவி வகித்தபோது, தலா ஏழு பேர்ச் காணியில் தனிவீட்டுத் திட்டம், பிரதேச சபைகள், செயலகங்கள் அதிகரிப்பு, மலையக அபிவிருத்தி அதிகார சபை என பலவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்தேன்.
எனினும், எனது அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எதிர்ப்பு அரசியலையே மேற்கொள்ள வேண்டியிருந்தது. மலையகத்தின் மாற்றத்துக்காக எதிரும் புதிருமாக அரசியல் செய்த நேரத்தில் இருசாராரும் அடிபிடிபட்டு பொலிஸ் நிலையம், நீதிமன்றம் சென்றதும் அதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டதும் பல்வேறு அனுபவங்களையும் படிப்பினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. உலகம் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறிக் கொண்டு வரும்போது, மலையகம் இன்னமும் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வருவது வேடிக்கையாகவும் இருக்கின்றது.
எனவே, உலகியல் மாற்றத்துக்கு ஏற்ப, மக்களை சமூக ரீதியாக ஒன்றுபடுத்தி அவர்களுக்கு வழிகாட்டி அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும், இ.தொ.கா. வும் தேர்தல் காலத்தில் தனித்தனியே போட்டியிட்டாலும், சில புரிந்துணர்வு அடிப்படையில் பொதுவான வேலைத் திட்டத்தின் கீழ் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
மலையகத்தில் தொடர்ந்தும் பகைமை பாராட்டி மக்களை பிரித்து வைப்பதோ, எதிர்ப்பு அரசியல் நடத்துவதோ அபிவிருத்தியை ஏற்படுத்தி விடமுடியாது. எமது வாழ்நாளில் ஒற்றுமையை வளர்க்கத் தவறினால், அது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் வரலாற்றுத் துரோகமாகவே அமைந்து விடும். மக்களின் எதிர்பார்ப்புக்கும், அபிலாஷைக்கும் ஏற்ப, கடந்த காலங்களில் தலைமைகள் விட்ட தவறுகள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பதே இன்றைய தேவையாகும்.
அதன் அடிப்படையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இ.தொ.கா. வும் செயற்படத் தீர்மானித்துள்ளதை சமூக நலன்கருதி வரவேற்பவர்களும் விமர்சிக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. போற்றுபவர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும். நாம் அரசியல், தொழிற்சங்க ரீதியில் என்றைக்கும் நிலைத்திருப்போம் என்று கூறிவிட முடியாது. ஆனால், கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தத் தவறினால் எதிர்கால சந்ததியின் தூற்றுதலுக்கு ஆளாக நேரிடும் என்பதையும் மறந்து விடக் கூடாது. எனவே, ஏனைய அமைப்புகளையும் எம்மோடு இணைந்து பயணிக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.
– மஸ்கெலியா நிருபர்