மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களை எடுப்பதற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்துக்கு பூரண சுதந்திரமுண்டு. அவர் நியாயமான முடிவுகளையே எப்போதும் எடுப்பார். அதை நாம் முழு மனதோடு ஆதரிப்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை அலுவலகமான “தாயகம்” திறப்பு விழா சம்பந்தமாக எமது சங்கத்தின் அங்கத்தவர்கள் மத்தியில் முரண்பாடுகளும், எதிரான அபிப்பிராயங்களும் நிலவுவதாக சிலர் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இதில் எந்த விதமான உண்மையும் கிடையாது.
மலையக சமூகம் பிளவுபட்டு நிற்கக் கூடாது என்பதிலும், சிதைந்து கிடக்கும் மக்களை ஒன்று சேர்த்து போராடுவதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதிலும் தலைவர் திகாம்பரம் நம்பிக்கை கொண்டுள்ளார். இதை வெறுமனே அறிக்கைகள் விடுவதிலும் ஊடக சந்திப்புகளிலும், மேடைகளிலும் மாத்திரம் கூறாமல் நடைமுறையில் கொண்டு வரவேண்டும் என்பதே அவரின் கனவாகும்.
அந்தக் கனவை நனவாக்கும் வகையில் மூன்று கட்சிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியும், இ.தொ.கா. வும் முக்கிய விடயங்களில் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவும், தேவை ஏற்படும் போது போராடவும் இணக்கம் காணப்பட்டுள்ளமை மலையகத்தின் விடிவை விரும்புகின்ற மக்களுக்கு மகிழ்சிகரமான விடயமாகும்.
எனினும், மலையக சமூகம் பிரிந்து கிடக்க வேண்டும் என்றும், ஒன்று சேர்ந்தால் தமக்கு ஆபத்து நேர்ந்து விடும் என்றும் நினைக்கின்ற சில சுயநலவாதிகள் எப்படியாவது பிளவை ஏற்படுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணியிலும் குறிப்பாக தொழிலாளர் தேசிய சங்கத்திலும், இ.தொ.கா. விலும் கருத்து மோதல்கள் இடம்பெற்று வருவதாக பிரசாரம் செய்வதில் முனைப்பாக இருகின்றார்கள். கடந்த கால நிகழ்வுகளை சுட்டிக் காட்டி விமர்சிக்கின்றவர்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சிந்திக்க மறந்து விடுகின்றார்கள். அவர்களின் கனவு இனிமேல் பலிப்பதற்கு வாய்ப்பு கிடையாது. தொழிற்சங்க ஒற்றுமைக்கு பல தரப்புகளினதும் ஆதரவு பெருகி வருகின்றது. இதைச் சீர்குலைத்து குளிர்காய நினைப்பவர்களுக்கு மக்களே தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்.
எமது தலைவர் திகாம்பரம் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் பின்வாங்கியதில்லை. தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த “பலம்” தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் தோட்ட நிர்வாகங்களுக்கு “பயம்” ஏற்படக் காரணமாக இருக்கும். அதேபோல், எதிர்காலத்தில் அரசியல் ரீதியில் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் உறுதுணையாக இருக்கும் என்பதால் கூட்டணியும் காங்கிரசும் கைகோர்த்துள்ளன. விரைவில் ஏனைய அமைப்புகளும் இணைந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
தொழிற்சங்கங்களின் ஒற்றுமையின்மை முதலாளி வர்க்கத்துக்கு சாதகமாகவும், தொழிலாளர்களுக்கு பாதகமாகவும் அமைந்து பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தி வந்ததை மறந்து விட முடியாது. என்றும் குறிப்பிட்டுள்ளார்