இது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடலை ஏற்படுத்துவது, மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை முன்வைப்பது, ஆண்களுக்கு சமனாக பெண்களுக்கும் அரசியலில் சமவாய்ப்பு வழங்குவது, அடுத்த தலைமுறை அரசியலுக்கு பாலமாக செயற்படுவது எனும் இலக்குகளைக் கொண்டதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி தொடங்கப்பட்ட மலையக அரசியல் அரங்கம் எதிர்வரும் 27 ம் திகதி ஞாயிறு தனது ஓராண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு களப்பணிகளை முன்னெடுத்துள்ள அரங்கம் ஒவ்வொரு மாதமும் இறுதி வாரத்தில் மெய்நிகர் உரையரங்கங்களை நடாத்தி வந்தது. மலையகத்தின் அரசியல் – தொழிற்சங்க – இலக்கிய ஆளுமைகள் பலரை நினைவு கூர்ந்து ஆற்றப்பட்ட இந்த உரைகளை துறைசார் ஆளுமைகள் வழங்கினர். அடுத்த நூற்றாண்டுக்கான மலையக அரசியல் உரையாடல் வெளியில் பேசப்படவேண்டிய, பேசுபொருளாக வேண்டிய விடயதானங்கள் உரையரங்கத் தலைப்புக்களாக்கப்பட்டு வளவாளர்களுடன் உரையாடல்களும் இடம்பெற்றன.
அதேநேரம் முதலாவது ஆண்டு நிறைவை சிறப்புக்கும் வகையில் தொழிற்சங்கத் துறவி
அமரர் வி.கே.வெள்ளையன் நினைவப் பேருரையாக
‘மலையக மக்களின் காணி உரிமையும் சிறுதோட்ட உடமையாளராதலின் அவசியமும்’ எனும் தலைப்பில் நேரடி உரையரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் – அரசியல் ஆய்வாரளருமான விக்டர் ஐவன் நினைவுப் பேருரையை ஆற்றவுள்ளார்.
‘இளைஞர்களினதும் பெண்களினதும் அரசியல் பங்கேற்பும், பங்களிப்பின் அவசியமும்’ எனும் தலைப்பில் சிறப்புக் கருத்துப் பகிர்வினை
சட்டத்தரணி சஞ்சுளா பீட்டர்ஸ் வழங்க உள்ளார்.
மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரைலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தலைமையில் ஹட்டன், நகர சபை மண்டபத்தில் 27-11- 2022 காலை 10 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
– மலையக அரசியல் அரங்கம் –