தனது வாழ்நாள் முழுவதையுமே மலையகத் தொழிற்சங்க – அரசியல் பணிகளுக்காக அர்ப்பணித்த செயற்பாட்டாளரான முத்து சிவலிங்கம் அவர்களின் வாழ்க்கை ஒரு வரலாறாகும் என முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
முன்னாள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான மூத்ததொழிற்சங்கவாதி முத்து சிவலிங்கத்தின் மறைவினை அடுத்து அவர் விடுத்திருக்கும் இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முத்து சிவலிங்கம் எனும் மூத்த தொழிற்சங்க ஆளுமையை இன்று மலையகம் இழந்திருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினரான அவரது கரங்களில் பாடசாலை மாணவனாக நான் பரிசு ஒன்றினைப் பெறும் நிழற்படம் எனது மனதில் நிழலாடுகிறது. பின்னாளில் அவருடன் பாராளுமன்றத்தில் சக உறுப்பினராக ஒன்றாக இருந்த காலத்தில் அவருடன் நேரடி விவாதங்களில் ஈடுபட்டுள்ளேன்.
விம்ர்சனங்களை முன்வைத்துள்ளேன். ஆனால் அவை எதனையுமே தனிப்பட்ட குரோதமாகவோ பகையாகவோ அவர் கருதியதில்லை. முதன் முதலாக அவருடன் உரையாடிய அந்த நாளும் அவர் அறிமுகமாகிக் கொண்ட விதமுமே அவரது அந்த பண்பைக் காட்டியது. 2011 ஆம் ஆண்டு இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த மாநாட்டில் இரண்டு மலையகக் கட்சிகளின் பிரதிநிதிகளாக நாங்கள் ஒரு அமர்வில் சந்தித்துக் கொண்டோம். எனது பாடசாலைக் கால பரிசளிப்பு விடயத்தை கூறி நான் அறிமுகமாகிக் கொண்டேன்.
“அங்கே ஊரில் நாம் அரசியல் கருத்துக்களால் முரண்பட்டுக் கொள்ளலாம். ஆனால் இங்கே வெளிநாட்டில் நமது மக்களின் பிரதிநிதிகளாக ஒன்றாய் நிற்போம்” என்றார். அன்றிலிருந்து அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவனாக காணும் போது உரையாடும் வழமையைக் கொண்டிருந்தேன்.
அவரது வாழ்நாளில் அவர் சார்ந்த அரசியல் கட்சிக்காகவும் கொள்கைக்காகவும் தொடர்ச்சியாக உறுதியாக இருந்தவர் முத்து சிவலிங்கம். அதில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்கும் அவரிடம் இடம் இருக்கவில்லை.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவியை சௌமியமூர்த்தி தொண்டமான் ஏற்றுக்கொண்ட பின்னர் இன்றைய ஐந்தாம் தலைமுறைத் தலைமைத்துவங்கள் வரை தொண்டமான் குடும்பத்துக்கு வெளியே ஒருவர் அந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் இருந்தார் என்றால் அது முத்து சிவிலங்கம் மாத்திரமே. அந்த வகையில் இனிவரும் ஐம்பதாண்டு காலத்தில் கூட இன்னுமொரு முத்து சிவலிங்கத்தின் இடம் நிரப்பபடுவதற்கான வாய்ப்புகள் மலையக அரசியல் களத்தில் இல்லை.
அவர் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தோட்டப்பகுதிகளுக்கு மின்சார இணைப்பைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று செயற்பட்டவராவார். அதனால் மின்சாரக் கண்ணா என்றும் செல்லமாகப் போற்றப்பட்டவர்.
அவரது அரசியல் பணிகளைவிட தொழிற்சங்க பணிகளையே முழு மூச்சாகக் கொண்டு செயற்பட்டவர் என்றவகையில் அவரது வாழ்க்கை ஒரு வரலாறாகிறது.
அன்னாருக்கு எமது அஞ்சலிகளைச் செலுத்துவதோடு அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.