கோட்டாவுக்கு குடைச்சல் கொடுக்க பேராயர் பதவியில் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நீடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் பேராயர் மல்கம் றஞ்சித் ஆண்டகையின் பதவியினை நீடிக்குமாறு வத்திக்கானுக்கு பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான வார பத்த்pரிகையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையை மறைக்க அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நீதி வழங்குவதற்காக பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருபவர் பேராயர் மல்கம் றஞ்சித் ஆண்டகை.
இதற்கிடையில், கடந்த வாரம் பேராயர் அவர்கள் தனது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.
வத்திக்கானில் 75 வயதுக்குப் பின்னர் பேராயர்கள் ஓய்வு பெறுவது பொதுவான மரபு. அதன்படி, பாரம்பரியத்தை பின்பற்றி, 75 ஆவது பிறந்த நாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, இது தொடர்பாக வத்திக்கானுக்கு கர்தினால்கள் அறிவித்திருந்தனர். அத்தகைய அறிவிப்புக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் கடிதம் வத்திக்கானில் இருந்து பெறப்படுவதும் பெரும்பாலும் அடுத்த பேராயர்களின் நியமனமும் அதே நேரத்தில் செய்யப்படுவதும் வழமை.
கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை!
எவ்வாறாயினும், இந்த கடிதத்தை அனுப்பியதன் மூலம், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியை அடைவதற்காக கர்தினால் பாரிய போராட்டத்தை தொடங்கி தொடர்ந்து வருவதால் அந்த போரை முடிக்க அவருக்கு இன்னும் சிறிது கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்கள் வத்திக்கானுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்த வேண்டுகோளை வத்திக்கான் பரிசீலிக்க முடிவு செய்தால், கர்தினால்களின் சேவையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் திறன் போப் ஆண்டவருக்கு உள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான கடிதம் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் கர்தினால்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் பின்னணியில், கடந்த வாரம் கர்தினால் ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஏழை, எளியோருக்கு தேவாலயம் ஊடாக வழங்கி வரும் உதவிகளை தொடர தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் பின்னர், கர்தினால் வத்திக்கானுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.