இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் இலங்கை ஆயுதப் படையினர் இடையிலான 50 ஆண்டுகால ஒத்துழைப்பினைக் குறிக்கும் முகமாக 2022 நவம்பர் 24ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இராணுவத்தினர் இடையிலான ஒத்துழைப்பு, தோழமை மற்றும் நட்புறவு ஆகியவற்றின் நிலைபேறான பிணைப்பினை கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. பாதுகாப்புச் செயலர், பாதுகாப்பு படைகளின் பிரதானி, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள், தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெற்றிருந்த அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
முன்னணி இந்திய பாதுகாப்பு நிறுவனமான தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கும் இரு நாடுகளுக்கும் இடையில் நிலையானதும் நெருக்கமானதுமான ஈடுபாடுகளுக்கு வழிசமைக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெற்ற இலங்கையர்கள் அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் இணையப்பக்கம் ஒன்று உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரட்னே ஆகியோரால் கூட்டாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தின் ஒரு பகுதியாக குறித்த இணையத்தளமானது (www.hcicolombo.gov.in/ndca) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையிலுள்ள முன்னாள் தேசிய பாதுகாப்பு கல்லூரி மாணவர்கள் தமது தொடர்புகளை பேணுவதற்கும், இரு அயல் நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ரீதியிலான ஒத்துழைப்பு குறித்த சமீபத்திய தகவல்களை பேணிக்கொள்வதற்கும் வழிசமைக்கும் ஓர் ஊடகமாக இந்த இணையத்தளம் செயற்படும்.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள், இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் ஆளுமைவிருத்தி செயற்பாடுகளை வலுப்படுத்துவதில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் ஆயுதப்படைகள் இடையிலான பயிற்சி ஈடுபாடுகள், ஏனைய சேவைகளுக்கு மத்தியில் இயங்குதிறன் மற்றும் சகோதரத்துவத்தின் உள்ளுணர்வை தூண்டும் அதேசமயம் அவர்களின் நிலையான பிணைப்பினை உறுதிப்படுத்துவதற்கான அடித்தளத்தையும் உருவாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியில் கல்வி கற்ற இலங்கையைச் சேர்ந்த அதிகாரிகளில் பெரும் எண்ணிக்கையானவர்கள் பாதுகாப்பு தலைமைத்துவத்தின் உயர் பதவிகள் வரை கடமையாற்றுவது இந்த வலுவான உறவின் முக்கியத்துவத்தினை எடுத்தியம்புவதாக அமைகின்றது.
இலங்கை ஆயுதப் படைகளின் ஆளுமை விருத்தி செயற்பாடுகளை உருவாக்குவதில் காணப்படும் இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பின் மீதான அக்கறை ஆகியவற்றின் ஒரு பகுதியாக பிராந்திய சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றினை மேம்படுத்துவதில் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியானது மிகவும் பெறுமதியான பங்களிப்புகளை வழங்கியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுமூகமானதும் நட்புமிக்கதுமான உறவுகளை வினைத்திறன்மிக்க வகையில் வலுவாக்கவும் இவ்வாறான அமைப்புகள் வழிசமைகின்றன.