ஒரே இரவில் ஜனாதிபதி எடுத்த முட்டாள்தனமான முடிவால் முழு நாடுமே சீரழிந்துள்ளது. உரத்தடை என்ற அவரது முடிவால் இன்று நாடு உணவு நெருக்கடியையும் பெரும் பஞ்சத்தையும் சந்தித்து வருகிறது.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கட்டளை நியதிகள் சட்டம் 27/2 இன் ஊடாக இந்நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திடம் பல கேள்விகளை முன்வைத்து இந்த முட்டாள்தனமான முடிவுகளால் நாட்டை சீரழிந்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.
இதுவரை அரிசியில் தன்னிறைவு பெற்ற நம் நாடு, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இரசாயன உரங்களை ஒரே இரவில் தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட முட்டாள்தனமான ஒரு முடிவினால் முற்றாக சரிந்தது. இந்த முடிவானது இன்று அரிசி விலை கடுமையாக உயர்வதற்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், உணவு நெருக்கடிக்கும் வழி வகுத்துள்ளது.
இது மாத்திரமன்றி எதிர்காலத்தில் மக்கள் தொகையில் சுமார் 1/3 பகுதியினர் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் இரண்டு வேளை உணவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தற்போதைய பிரதமரும் கூட கூறுகிறார்.
வேகமாக உயர்ந்து வரும் பொருட்களின் விலைகள் காரணமாக மனித நுகர்வுணவு வேளையில் புரதத்தின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றன.
இதற்குப் பொறுப்பானவர்களும், பொறுப்புக்கூற வேண்டியவர்களும் தங்களின் தவறுக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலும் கூட தவறைத் திருத்துவதற்கு இது மாத்திரம் பரிகாரமாக அமையாது.
தமது வாழ்வாதாரமாக விவசாயம் மேற்கொண்டு வந்த மக்களுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலையை ஏற்ப்படுத்தி,பிற தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களை தங்களின் தேவைக்காக விவசாயம் செய்யச் சொல்லிக் கோருவது தான் இப்போது அரசாங்கத்தின் ஒரே தீர்வாகத் தெரிகிறது.
எவ்வாறாயினும்,எதிர்வரும் காலங்களில் மக்களின் பட்டினியைப் போக்க உணவு விநியோக வலயமைப்பை வலுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.