‘அல்லி’ யா? நீலோற்பலமா? தேசிய மலர் குறித்து சர்ச்சை

0
299

இலங்கையின் தேசிய மலர் அல்லி மலரா? அல்லது நீலோற்பலமா? (நில் மானல்) என்பது தொடர்பில் சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் நசீர் அஹமட் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் தீப்தி யகந்தாவல மற்றும் வயம்ப பல்கலைக்கழத்தின் விவசாய மற்றும் பெருந்தோட்டமுகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கபில யகந்தாவல ஆகியோர் பல ஆண்டுகளாக தீர்மானம் எடுக்கப்படாது சர்ச்சையில் காணப்படும் இலங்கையின் தேசிய மலர் குறித்த விடயம் தொடர்பில் நீண்ட விளக்கமளித்தனர்.
பேராசிரியர் யகந்தாவல முன்வைத்த கருத்துக்களின் படி 1986ஆம் ஆண்டு பெப்ரவரி 26ஆம் திகதி இலங்கையின் தேசிய மலர் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய தேசிய மலர் நீலோற்பலம் (நில் மானல்) என்பது உத்தியோகபூர்வமாக அமைச்சரவைப் பத்திரம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் நீலோற்பலத்தை சித்தரிக்கும் விதத்தில் ஊதா நிறம் சார்ந்த அல்லி மலரின் புகைப்படமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது உண்மையான நீலோற்பலம் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

1986ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தத் தவறு பேராசிரியர் உள்ளிட்ட குழுவினரால் 2010ஆம் ஆண்டு அப்போதிருந்த ஜனாதிபதி, சுற்றாடல் அமைச்சர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் உயிர்பல்வகைமை செயலகம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2015ஆம் ஆண்டு தேசிய மலர் குறித்த சரியான படம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் 2015ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சினால் சரியான மலரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தபோதும், இலங்கையின் தேசிய மலரின் சிங்களப் பெயர் மானல் மலர் (அல்லி மலர்) என்றும், ஆங்கில மொழியில் புளூ வோட்டர் லில்லி என்றும் தமிழில் நிலோற்பலம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மொழியில் புலமை பெற்ற பேராசிரியர் விமல் ஜீ. பலகல்ல அவர்களின் நிலைப்பாட்டுக்கு அமையவே நீலோற்பலம் (நில் மானல்) என்ற பெயருக்குப் பதிலாக தேசிய மலராக மானல் (அல்லி) எனப் பெயரிடப்பட்டுள்ளது என சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கருத்துப்படி, அல்லி என்பது உன்னதமான நீல மலர் என்பதால் தேசிய மலரின் சிங்களப் பெயரை மானெல் (அல்லி) எனப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here