பெண்களுக்கு குழந்தை பிறக்காத வண்ணம், மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் பலோப்பியன்குழாய்களை சேதப்படுத்தியதாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பில் இடம்பெற்ற கைதினால் சிறையில் அடைக்பபட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட வைத்திய நிபுணர் ஷாபி ஷிஹாப்தீன் தனது சம்பள நிலுவைத் தொகையான ரூ. 2.6 மில்லியனை, இலங்கையின் அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக, சுகாதார அமைச்சுக்கு மீள கையளித்துள்ளார்.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு விசேட மருத்துவராக இருந்த இவர் மேற் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்களால் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
குறித்த குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்மற்றவை என அறிவித்த நீதிமன்றம் அவரை நிரபராதி என விடுதலை செய்திருந்தது. இந்நிலையில் அவர் பணி இடைநிறுத்தம் மேற்கொண்டமை காரணமாக நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மீளச் செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, வைத்தியர் ஷாபிக்கு உரித்தான சம்பள நிலுவைத் தொகை மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் உள்ளடங்கிய ரூ. 2,675,816.48 (ரூ. 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 மற்றும் 48 சதம்) தொகை காசோலை சுகாதார அமைச்சினால் வைத்தியர் ஷாபிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் சுகாதார அமைச்சிற்கு திரும்ப வழங்க வைத்தியர் ஷாபி முடிவு செய்துள்ளார்.
தற்போது நாட்டில் கடும் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை வாங்குவதற்கு தேவையான பணமாக குறித்த சம்பள பாக்கியை சேர்த்துக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் பிரிவில் கடமையாற்றிய விசேட வைத்தியர் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் பெருமளவிலான பெண்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் கருத்தடை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட நிலையில் அக்குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சேவைக்கு அழைக்கக்கப்பட்டார்.
நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கில் நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியிருந்தது. அதன்படி, அந்த காலக்கட்டத்தில் அவருக்கு வழங்கப்படாத சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அனைத்தையும் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகிய இரு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டது.
சேவையிலிருந்து கட்டாய விடுப்புக் காலத்திற்கான நிலுவை சம்பளம், கொடுப்பனவுகள், இடைக்கால கொடுப்பனவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் அனைத்தையும் மனுதாரர் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் செலுத்த முடியுமென சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இதன்படி, சுகாதார அமைச்சினால் வைத்தியர் ஷாபியின் நிலுவைத்தொகையும் செலுத்தப்பட்டது.