புனித பொஸன் பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை 173 சிறைக் கைதிகள் விசேட பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மெகசீன், போகம்பறை, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, பதுளை, நீர்கொழும்பு, குருவிட்ட, மஹர, வாரியபொல, அநுராதபுரம், களுத்துறை, காலி, தல்தென, வட்டரெக, மாத்தறை, அங்குணகொலபெலஸ்ஸ, பொலன்னறுவை, கேகாலை, மொணராகலை, பல்லன்சேன, பல்லேகலை, வீரவில ஆகிய சிறைச்சாலைகளிலிருந்த கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 141 கைதிகள் அபராதத் தொகை இரத்து செய்யப்பட்டதன் அடிப்படையிலும் 32 கைதிகள் 14 நாட்கள் தண்டனைக் காலத்தை குறைக்கப்பட்டதன் காரணமாகவும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உச்சபட்சமாக, 23 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் பரிந்துரைக்கு அமைய, சிறு குற்றங்கள், அபராதம் செலுத்த வழியின்றி சிறையில் அடைக்கப்பட்டமை போன்ற குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.