இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் 64 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது திருமலை கடற்பரப்பில் வைத்து இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக பயணிப்பதற்கு உதவியவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் உள்ளிட்ட 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட, 02 முதல் 55 வயதுக்குட்பட்ட 64 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
திருமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மற்றும் மிகவும் ஆபத்தான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சிக்கும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.