இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட கச்சதீவு தொடர்பான ஒப்பந்தம் காரணமாக இலங்கையின் வடக்கு கிழக்கு பிதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்களே பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளனர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருப்பதுடன்,
இருந்தபோதிலும் கச்சதீவை இந்தியாவிடம் கையளிக்கும் எந்தவிதமான நோக்கமும் இலங்கைக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் கடற்றொழில், நீர்வேளாண்மை செயற்பாடுகள் மற்றும் அவற்றினை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று மன்னாருக்கான விஜயம் ஒன்றை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார்.
இதன்போது, மாவட்ட கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில்முறை முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய மன்னார் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், தவறான நோக்குடன் இந்தியத் தரப்பினரால், கச்சதீவு தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், குறித்த விடயத்தில் அமைச்சர் வெளியிட்ட நிலைப்பாடு தொடர்பாக மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக சுட்டிக்காட்டிய மன்னார் கடற்றொழிலாளர்கள், அவற்றை தேவையானளவு கிடைக்கச் செய்யுமாறு கேட்டதுடன், நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு கைமாறாக, தங்களுடைய வளங்களை அழிக்கும் சட்ட விரோத தொழில் முறையை அனுமதிக்கவோ அல்லது கச்சதீவை கையளிக்கவோ அனுமதிக்க கூடாது எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், “எமது வளங்களை அழிக்கும் தொழில்முறையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் நான் உறுதியாகவே இருக்கின்றேன்.
கச்சதீவு விவகாரம் அரசியல் நோக்கங்களுக்காக சிலரினால் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. எனினும், அவ்வாறான எந்தவகையான எதிர்பார்ப்புக்களும் இந்திய மத்திய அரசாங்கத்திடம் இருப்பதாக தெரியவில்லை. உண்மையிலேயே, குறித்த ஒப்பந்தம் காரணமாக மீன்வளம் நிறைந்த கணிசமானளவு கடல் பரப்பில் மீன்பிடியில் இலங்கை கடற்றொழிலாளர்கள் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெரியளவில் யாரும் கதைப்பதில்லை. இநத உண்மையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவருக்கு கடிதம் அனுப்புவதற்கு திட்டமிட்டு வருகின்றேன்.
இந்தியாவிற்கும் காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கும் இடையில் போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பான எனது நீண்ட முயற்சி தற்போது கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளது. அது செயற்பட ஆரம்பிக்குமாயின், எரிபொருள் பிரச்சினை மாத்திரமன்றி, மருந்துப் பொருட்கள், விவசாயிகளுக்கான உரப் பிரச்சினை உட்பட அத்தியாவசிப் பொருட்களுக்கான பற்றாக்குறையும் நீங்கி விடும் என்று எதிர்பார்க்கின்றேன்.”என்று தெரிவித்தார்.
கடலட்டை வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை செய்கை அதிகரிப்பதால் பாரம்பரிய கடற்றொழில் பாதிக்கப்படும் என்ற கருத்தை மறுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலை நம்பி வாழுகின்ற மக்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான மேலதிக வழிமுறையாகவே நீர்வேளாண்மை ஊக்குவிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.