இந்திய இலங்கை இராஜதந்திர உறவின் 75 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு, 2022 ஜூன் 14 ஆம் திகதி புனித பொசன் போயா தினத்தில் அனுராதபுரம் ருவான்வெலி மஹா சேயா வளாகத்தில் ஜாதக கதைகள் ஒலிப் புத்தகம் சிங்கள மொழியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
செவிப்புலன் பாதிப்புடையவர்கள் பயன்பெறுவதனை இலக்காகக்கொண்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள இந்த தொகுப்பானது 50 ஜாதகக் கதைகளைக் கொண்டுள்ளதுடன் ஜாதகட்டாகதைகள் என்ற தொகுப்பிலிருந்து நல்வழி என்ற தொனிப்பொருளின் கீழ் தெரிவுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரிவின் கவுன்சிலரும் உயர் ஸ்தானிகராலய தலைமை அதிகாரியுமான டாக்டர் சுஷில் குமார், இந்த ஒலி வடிவத்திலான நூலின் முதல் தொகுப்பினை சங்கைக்குரிய மஹாசங்கத்தினரிடம் கையளித்தார்.
சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் சமகால இந்திய கற்கைகளுக்கான நிலையம் ஆகியவற்றின் ஒன்றிணைவில் இந்த ஒலிப்புத்தகம் வடிவமைக்கப்பட்டதுடன் அதிவணக்கத்துக்குரிய ரம்புக்கணை சித்தார்த்த தேரர் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் ரேவந்த் விக்ரம் சிங், கொழும்பு பல்கலைக் கழகத்தின் சமகால இந்திய கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் உபுல் ரஞ்சித் ஹேவாவிதானகமகே, டாக்டர் டபிள்யூ.ஏ.அபேசிங்ஹ உள்ளிட்ட பலரின் மேற்பார்வையுடனும் பிரபலமான தொலைக்காட்சி மற்றும் வானொலி தொகுப்பாளர் வத்சலா சமரக்கோனின் பங்களிப்புடனும் இந்த ஒலிப்புத்தகம் தொகுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது