சுகாதார சேவைப் பணியாளர்களுக்காக நாடளாவிய ரீதியில் 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு அதனூடாக அவர்களுக்கு எரிபொள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக எரிபொருள் கொடுப்பனவு ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற பெரிதும் உதவும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த சலுகையை பெறவுள்ள அனைத்து சுகாதார ஊழியரும் தேவையேற்படின் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை எரிபொருள் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அல்லது சுகாதார நிறுவனம், ஊழியரின் பெயர், பதவி, தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன வகை மற்றும் பதிவு இலக்கம் ஆகியவற்றை நிறுவன தலைவரால் அத்தாட்சிப் படுத்தப்பட்ட ஆவணம், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சமர்ப்பிக்கபட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, வாராந்தம் அதிகபட்சமாக மோட்டார் கார்கள் மற்றும் ஜீப்களுக்கு 40 லீற்றர், ஓட்டோக்களுக்கு 15 லீற்றர், மோட்டார் சைக்கிள்களுக்கு 10 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.