அவுஸ்திரேலியவின் முன்னாள் வீராங்கனையான 42 வயதுடைய லிசா ஸ்தலேகர் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் நியோனில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அவுஸ்திரேலிய வீராங்கனையான லிசா தலைவராக தெரிவு செய்யப்பட்டார். தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் பெரிரிச்சர்ட்ஸ்; மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் ஜிம்மி ஆடம்ஸ் மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர் விக்ரம் சோலங்கி ஆகியோர் இப் பதவியை முன்னர் வகித்திருந்தனர்.
லிசாஸ்தலேகர், 187 சர்வதேசப் போட்டிகளில் அவுஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கியுள்ளார். அத்துடன் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்துவதற்கு அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார்.
2007 மற்றும் 2008 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அவுஸ்திரேலியாவின் சிறந்த மகளிர் சர்வதேச வீராங்கனைக்கான மதிப்புமிக்க பெலிண்டாகிளார்க் விருதையும் ஸ்தலேகர் பெற்றுள்ளார்.
FICA இன் புதிய தலைவராக இருப்பதில்தான் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ள அவர், கிரிக்கெட் நிச்சயமாக உலகளாவிய விளையாட்டாகமாறி வருகிறது என்பதை நிரூபிக்கும் விளையாட்டை பல நாடுகள் விளையாடுகின்றதாக கூறினார்.
ஸ்தாலேகர் 2001 இல் அவுஸ்திரேலியாவுக்காக துடுப்பாட்ட வீரராக அறிமுகமானார்.
அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார், 125 போட்டிகளில் இரண்டு சதம் மற்றும் 16 அரைசதங்களுடன் 2728 ஒட்டங்களை குவித்தார். சுழல் பந்துவீச்சாளராக அவர் அணியின் வெற்றிக்கு பங்காற்றியதுடன் 146 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்தாலேகர் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண வெற்றியுடன் விடைகொடுத்தார். இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 10 ஓவர்கள் பந்து வீசிய அவர் வெறும் 20 ஒட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
ஆக்கம் – பெ.சுரேஸ்