அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரியுள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கம் அமைய வேண்டிய விதம் மற்றும் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளை நிவர்த்திப்பது தொடர்பிலான 10 விடயங்களை உள்ளடக்கி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
ஆறு மாதங்களுக்கு சர்வகட்சி அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், தேவைக்கு ஏற்ப அதனை நீடிக்க வேண்டும் எனவும், அவ்வாறு இடம்பெறாவிட்டால் அரசாங்கமொன்றை உருவாக்க மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
சர்வ கட்சி அரசாங்கத்தின் பிரதானியாக கட்சித் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவிக்கும் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி சார்பற்ற பிரஜை ஒருவரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டுமெனவும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15 ஆக வரையறுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு நிபுணத்துவ குழுவொன்றை நியமிக்க வேண்டும் எனவும் அதன் சிபாரிசுகளை செயற்படுத்த சுயாதீன குழுவொன்றை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரர், அமரபுர பீட மகாநாயக்கர் தொடம்பஹல ஶ்ரீ சந்திரசிறி தேரர், ராமஞ்ஞ பீட மகாநாயக்கர் மகுலேவே ஶ்ரீ விமல தேரர் ஆகியோர் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
மக்களின் உயிரை பாதுகாக்க நிறைவேற்று அதிகாரத்தினால் அல்லது பாராளுமன்றத்தினால் முடியாவிட்டால், மக்களின் அழுத்தம் மேலும் அதிகரிக்காத வகையில் திறமையான புத்திஜீவிகளுக்கு நாட்டின் அரச நிர்வாகத்தை கையளிப்பது ஒட்டுமொத்த இலங்கைவாழ் மக்களின் பாராட்டுக்கு காரணமாக அமையும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக எதிர்ப்புகளையும் கருத்திற்கொள்ளாது, அடக்கும் அணுகுமுறையை பின்பற்றுவதனால் மக்களின் எதிர்ப்பு மேலும் தீவிரமடைய காரணமாக அமையும் எனவும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.