பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, தங்க மங்கை பி.டி.உஷா உட்பட, தென் மாநிலங்களைச் சேர்ந்த நான்கு பேர் ராஜ்யசபாவின் நியமன எம்.பி.,யாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் முக்கிய பங்காற்றியவர்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும்.
நாடாளுமன்றத்தில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். அந்தவகையில், தற்போது இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவின் நியமன எம்.பி.,க்களுக்கான ஏழு இடங்கள் வெற்றிடமாக இருப்பதனால் இதில், நான்கு இடங்களுக்கான எம்.பி.,க்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.
இந்த அறிவிப்பின் படி, தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, 79, கேரளாவை சேர்ந்த முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா, 58, ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமவுலியின் தந்தையும், திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத், 80 ஆகியோருக்கு நியமன எம்.பி., பதவி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் தர்மஸ்தலா கோவிலின் நிர்வாகியும், சமூக சேவகருமான வீரேந்திர ஹெக்டே, 73, என்பவருக்கும் நியமன எம்.பி., பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தி:
இசையமைப்பாளர் இளையராஜா, தன் இசைத்திறமையால் தலைமுறைகளை தாண்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அவரது அருமையான இசை பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி வருகிறது. மிக சாதாரண பின்புலத்தில் இருந்து வந்து, இன்று மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ள அவரது வாழ்க்கை பயணம், பல்வேறு தரப்பினருக்கும் உத்வேகத்தை அளிக்ககூடியது. அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினியும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.