அபிநயக்ஷேத்ராவின் மாணவர்களான சொக்கர் பிரவீன், நிவேதிதா கணேசன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் அண்மையில் வெள்ளவத்தை இராம கிருஸ்ண மண்டபத்தில் இடம்பெற்றது.
கலாசூரி திவ்யா சுஜேனின் ஆய்வும் நடன ஆக்கத்திலும் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஞானபாநு கலாநிதி ராஜ்குமார் பாரதி இசையும் மார்க்க ஆக்கமும் வழங்கியிருந்ததுடன் முதன்மை விருந்தினராகவும் கலந்துகொண்டார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உமா மகேஸ்வரன் கலந்துகொண்ட இந்நிகழ்வில், கௌரவ அதிதிகள், சிறப்பு அதிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
பல்லாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட செந்தமிழ் தந்த புதையலாய் புகழ் பெற்று விளங்குகின்றன ஐம்பெருங் காப்பியங்கள். தமிழின் பெருமையையும் , வாழ்வியல் பண்புகளையும், நிலையாமையின் தத்துவத்தையும் தெளிவுறத் தரும் காப்பியங்களில் முத்தமிழும் இழையோடுகிறது.
இவ்வாறான அரிய விடயங்கள் காலத்தினால் அழியாதவை எனினும் கலைகளினூடு ஆராதிக்கப்பட வேண்டியன என்பதற்கு சான்றாக , ஐம்பெருங் காப்பியங்களாக போற்றப்படும் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.