தமிழ்க் கூட்டமைப்பினர் டலஸுக்கு ஏன் ஆதரவு? – சுமந்திரன் எம்.பி. விளக்கம்

0
388
“நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள இடைக்கால ஜனாதிபதிக்கான தேர்தலில் எமக்கு முன்பாக இருக்கும் தெரிவுகள் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகக் கவனமாக ஆராய்ந்து டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாகத் தீர்மானித்துள்ளோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவியிலிருந்து இறக்கிய மக்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இடைக்கால ஜனாதிபதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டை ஆள்வதற்கான அங்கீகாரத்தையும் தார்மீக அதிகாரத்தையும் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு நாடாளுமன்றத்துக்கு உள்ளது.
நீண்ட போரின் தாக்கங்களாலும் சகல அரசுகளினது புறக்கணிப்பாலும் பொருளாதார ரீதியில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்து மக்களும் இன்று பாரிய பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இப்படியான சூழ்நிலையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் பின்னரும் மிகவும் தேவையாக இருந்த அரசியல் விழிப்புணர்ச்சியின் பின்னருமான மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து அவர்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்க கூடிய அரசு ஒன்று அத்தியாவசியமாகும்.
மக்கள் போராட்டமானது எண்ணிக்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள், போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல், நீதியானதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வு உள்ளடங்கலாக ஆட்சி முறையில் அடிப்படையிலான மாற்றங்களைக் கோரியிருந்தது.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான இணக்கப்பாட்டு அரசு ஒன்று அமைக்கப்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கின்ற அதேவேளையிலே, தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் கோரிக்கை மற்றும் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தொடர்ச்சியான அழுத்தத்தைப் பேணுவோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் அதேவேளையிலே அனைவரையும் உள்ளடக்கும் ஐக்கிய இலங்கையை மையமாக வைத்து தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்போம். விசேடமாக பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் எமது மக்களுக்கு இது அத்தியாவசியமானதாகும்.
அனைத்து மக்களின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்த்து, அனைவரையும் உள்வாங்கி, சம பிரஜைகளாக மதிப்பதே பொருளாதார மீட்சிக்கும் நிலையான ஆட்சிக்கும் வழிகோலும் என்பது எமது நம்பிக்கையாகும்.
எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுபீட்சத்துக்கும் அத்தியாவசியமான தமிழ் மக்களுக்கான நீதியான அரசியல் தீர்வுக்கு நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
இந்த இடைக்கால ஜனாதிபதித் தேர்தலில் பூரணமாகத் திருப்திப்படக் கூடிய தெரிவாக எவரும் இல்லை என்பதை நாம் அறிவோம். டலஸ் அழகப்பெரும இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவாராக இருந்தால் 21ஆவது அரசமைப்பு திருத்தத்தைச் செய்யவும், மக்கள் எதிர்பார்க்கின்ற பொருளாதார மீள் எழுச்சியை ஏற்படுத்துவதிலும் நாம் அவரைப் பொறுப்புக்கூற வைப்போம்.
அடுத்த தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்கும்வரை நம்பிக்கையில் மட்டுமே அவர் ஜனாதிபதிப் பதவியை வகிப்பார்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here