நாடளாவிய ரீதியில் குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள், காலி, மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்மலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நிலவும் அதிக மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அத்தனகலு ஓயா, உருவல் ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் வௌ்ள அபாய நிலை ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமையால், திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜாஎல, கட்டான, வத்தளை பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயாவின் நீரேந்து பகுதிகளில் கடந்த சில நாட்களாக குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை இதற்கான காரணமென நீர்ப்பானசத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் குடா கங்கை மற்றும் மகுர கங்கை ஆகியன வான்பாயும் இடங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வௌ்ள நிலைமை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புளத்சிங்ஹள, மதுராவ, பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பானசத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வங்காள விரிகுடாவை அண்மித்து நிலவும் தளம்பல் நிலைமை எதிர்வரும் சில தினங்களில் தாழமுக்கமாக வலுவடைந்து நாட்டை கடந்து செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் அதன் நேரடியான தாக்கம் இலங்கைக்கு காணப்படும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதன் காரணமாக மத்திய, சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் வட மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.