இம்மாதம் 23இல் கொழும்புக் கம்பன் கழகத்தின் பேச்சு, கவிதைப் போட்டிகள்

0
143

இவ்வாண்டு ஜுனில் இடம்பெறவுள்ள கொழும்புக் கம்பன் விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் அமரர் துரை. விஸ்வநாதன் நினைவுப் பேச்சுப் போட்டி, அமரர் பொன். பாலசுந்தரம் நினைவுக் கவிதைப் போட்டி, நாவலர் நற்பணிமன்ற அனுசரணையில் நடாத்தப்படும் திருக்குறள் மனனப்போட்டி, இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் அனுசரணையில் நடாத்தப்படும் இஸ்லாமிய இலக்கியப் பேச்சுப் போட்டி என்பன மே மாதம் 23 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு 04 லோரன்ஸ் வீதியில் அமைந்துள்ள பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.

பேச்சுப் போட்டி 02 பிரிவுகளாக இடம்பெறுவுள்ளது. மத்திய பிரிவுப் போட்டிகளில் 13-16 வயதுக்குட்பட்ட மாணவர்களும், மேற்பிரிவு போட்டிகளில் 17-30 வயதிற்குட்பட்ட போட்டியாளர்களும் கலந்து கொள்ளலாம். கவிதைப் போட்டி ஒரே பிரிவாக மட்டுமே இடம்பெறும். இதில் 14-30 வயதிற்குட்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளலாம். திருக்குறள் மனனப் போட்டி ஒரே பிரிவாக மட்டும் நடைபெறும். இப்போட்டியில் தரம் 8 வரையான வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்வோர் அறத்துப்பாலின் இல்லறவியலில் உள்ள அன்புடைமை முதல் அழுக்காறாமை வரையுள்ள பத்து அதிகாரங்களிலுள்ள 100 குறள்களை மனனம் செய்திருப்பதோடு அக்குறள்களுக்கான பொருளறிவையும் பெற்றிருத்தல் வேண்டும். இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாசீம் உமர் அவர்களின் அனுசரணையோடு இடம்பெறும் இஸ்லாமிய தமிழிலக்கியப் பேச்சுப் போட்டி சீறாப்புராணம் தொடர்பாக இடம்பெறும். ஒரே பிரிவாக மட்டுமே இடம்பெறும். இப்போட்டியில் பாடசாலை மாணவர் எவரும் கலந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் பத்திரிகைகள் மூலம் முன்னரே கோரப்பட்டிருந்தன. விண்ணப்பித்த போட்டியாளர்களுக்கான அனுமதி அட்டைகள் போட்டியாளர்களின் முகவரிகளுக்கு அல்லது பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போட்டியாளர்கள், அவ்வனுமதி அட்டைகளுடன் போட்டி மண்டபத்திற்கு, குறித்த நேரத்தில் சமூகமளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். போட்டிகளுக்கு விண்ணப்பித்தோர் அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிடினும் தக்க சான்றுகளுடன் நேரடியாகப் போட்டி மண்டபத்திற்கு வருகை தரலாம் எனக் கொழும்புக் கம்பன் கழகம் அறிவித்துள்ளது.

தரமான நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கும் ஜுன் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 4 நாட்கள் நடைபெறவுள்ள கம்பன் விழாவில் தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கப் பரிசில்கள் வழங்கப்படும் எனவும் போட்டிகளில் இயல்பாளுமையை வெளிப்படுத்தும் போட்டியாளர்கள் கம்பன் விழா நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here