பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவும், மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ கொழுந்துக்கு 80 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு சகல தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் ஆதரவை வழங்கியிருந்தார்கள். முதலாளிமார் சம்மேளனம் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு வழக்குத் தாக்கல் செய்திருந்தது. எனினும் இந்த மனுவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது தொழிற்சங்க ஒற்றுமைக்கும், தொழிலாளர்களின் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றியாகும்.
மேலும், இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக 29 ஆந் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதகமாகவே அமைந்து தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்