தங்களின் தலைமயிலான கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாகவும் பிரதமராகும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை எமது மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்
நரேந்திர மோடிக்கு திகா எம்.பி. வாழ்த்துச் செய்தி
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு மூன்றாவது முறையாகவும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலங்களைப் போல இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் மீது தொடர்ந்து அக்கறை காட்ட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
பிரதமர் மோடி தலைமயிலான கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாகவும் பிரதமராகும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை எமது மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது 2017 இல் இலங்கைக்கு விஜயம் செய்த போது, மலையகத்துக்கும் வருகை தந்து எமது மக்களை நேரடியாக சந்தித்திருந்தீர்கள்.
இந்தியா மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய 4 ஆயிரம் தனி வீட்டுத் திட்டத்தை நடைமுறைப் படுத்தியதன் விளைவாக மேலும் 10 ஆயிரம் தனி வீடுகளை கட்டிக் கொடுக்க உறுதியளித்திருந்தீர்கள். அத்தோடு மலையக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் புலமைப் பரிசில் உட்பட பல்வேறு உதவிகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன .அதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து அமையவுள்ள அரசாங்கத்தில் தங்களது பணிகள் சிறப்பாக அமையவும், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் பயன்பெறவும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் இந்தியா முன்னுரிமை அடிப்படையில் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.