லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிளகுசேனை தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 07 வீடுகளில் வசித்து வந்த 11 குடும்பத்தை சேர்ந்தவர்கள் அத் தோட்ட வாசிகசாலையில் சிரமத்துக்கு மத்தியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மிளகுசேணை தோட்டத்தில் இரண்டு பகுதிகளில் 24 வீடுகளை கொண்ட இலக்கம் (01) தொடர்வீட்டு குடியிறுப்பில் வியாழக்கிழமை (04) இரவு 7.50 மணியலவில் திடீரென தீ பிடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ பிடிப்பு சம்பவத்தில் (07) வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளை கொண்ட இந்த தொடர் குடியிருப்பு (லயத்தில்) ஒரு பகுதியில் மூன்று வீடுகளும், மறு பகுதியில் நான்கு வீடுகளும் தீக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தி்ல் ஏனைய வீடுகளுக்கு தீயை பரவவிடாமல் தோட்ட இளைஞர்கள்,பொது மக்கள் பாடுப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.
அதேநேரத்தில் இந்த சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் வரை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த தீ சம்பவத்தில் தமது உடமைகள்,மற்றும் சொத்துக்கள்,முக்கிய ஆவணங்கள் என இழந்து நிர்கதிக்கு உள்ளான பாதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் வீடுகளிலும், தோட்ட வாசிக சாலையிலும் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் தற்போது தீக்குள்ளான தொடர் குடியிருப்பு லயம் இதற்கு முன்பும் இரண்டு தடவைகள் மின் ஒழுக்கு காரணமாக தீப்பிடிப்பிலிருந்து தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த லயத்திற்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரம் தொடர்பில் மின் கசிவு ஏதும் உள்ளதா என பரிசோதிக்க தோட்ட நிர்வாகம், கிராமசேவகர், லிந்துலை உப மின்சார சபை காரியாலய அதிகாரிகளுக்கும் பல முறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
இது இவ்வாறிருக்க இந்த தோட்டத்தில் வீடுகள் அற்ற குடும்பத்திற்கு 75 வீடுகள் தேவையாக உள்ளதால் இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திற்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக தோட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் இந்த சம்பவமும் இடம்பெற்று ஏழு வீடுகளில் வசித்து வந்த 11 கும்பத்தில் நிர்கதிக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என ஒருமனதாக தோட்ட மக்கள் முடிவு எடுத்துள்ளதாகவும் இதை வழங்க முன்வரும் அரசியல்வாதிகளை வரவேற்பதாகவும், இல்லையேல் புறக்கணிப்பதாகவும் தோட்ட மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தீப்பிடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை லிந்துலை பொலிஸார் நுவரெலியா இரசாயன தடையவியல் பொலிஸாரின் உதவியுடன் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவு மற்றும் இதர உதவிகளை தோட்ட நிர்வாகம் ,கிராமசேவகர் ஊடாக வழங்கி வரும் நிலையில் மறுபுறத்தில் இழப்பீடுகள் தொடர்பில் பதிவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.