நாடளாவிய ரீதியில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் சுகவீன விடுமுறை போராட்டம் இன்று (09) செவ்வாய் கிழமை இரண்டாவது நாளாக தொடர்கின்றது.
இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கத்தினரும் இணைந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக பாடசாலைகளில் வழமையான கல்வி நடவடிக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் வழமையான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது இந்த நிலையில் இன்றைய தினம் வழமை போல் பாடசாலைகளுக்குச் சென்ற மாணவர்கள் சென்றவுடன் திரும்பிய நிலையை நுவரெலியாவில் அவதானிக்க கூடியதாக இருந்தது.
அதே நேரத்தில் சுகவீன விடுமுறை போராட்டம் நுவரெலியாவிலும் முன்னெடுக்கப்படுகிறது. இருந்த போதிலும் நுவரெலியா கோட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முடங்கியுள்ளது.
மேலும் எதிர்வரும் க.பொ.த.(சாதாரண தர) பரீட்சைக்கு தோற்றவுள்ள நுவரெலியா பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு முன் ஏற்பாட்டு பரீட்சை நடத்துவதற்காக இன்று (09) ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இப்பரீட்சைக்கு வருகை தந்த மாணவர்கள் பாடசாலைகளில் காத்திருந்தமையை அவதானிக்ககூடியதாக இருந்தது.
அதேநேரத்தில் நுவரெலியா நீதிமன்றம், வைத்தியசாலை,
மாநகரசபை, வழமைப்போல இயங்கியது. ஆனால் மாவட்ட செயலகம்,பிரதேச செயலகம், விவசாய திணைக்களம், தேர்தல் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்களில் ஊழியர்கள் வருகை குறைவினால் மந்தகதியில் இறங்கியதும் இத் திணைக்ளங்களில் சேவையை பெற்றுக்கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றடயும் குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்.