பத்து இலட்சம் ரூபா மோசடி நுவரெலியாவில் பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

0
226
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தரும் முகவர் நிலையம் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய  பத்து இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை இம்மாதம் (25.07.2024) வியாழக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று (11) மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா நாணயக்கார பிறப்பித்துள்ளார்.
 இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
நுவரெலியா விஷேட பொலிஸ் பிரிவில்  கடமையாற்றி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உறவினர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்வதற்காக வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றுக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டியிருந்தது.
இந்த பணத்தை தனது உறவினரான பொலிஸ் அதிகாரிக்கு அனுப்பிவைத்து வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு செலுத்துமாறு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் நீண்ட நாட்களாக இந்த பணத்தை குறித்த பொலிஸ் அதிகாரி செலுத்தாத நிலையில் தான் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாத விரக்தியில் பொலிஸ் அதிகாரியின் உறவினர் பொலிஸ் முறைப்பாடு செய்து நுவரெலியா நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளார்.
இவ்வாறு தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்காக (11) வியாழக்கிழமை இன்று பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் விசாரணையில் பொலிஸ் அதிகாரி உறவினர் வழங்கிய பணத்தை முகவர் நிலையத்திற்கு வழங்காதது தெரியவந்தது.
இந்த நிலையில் உறவினர் வழங்கிய பணத்தை மோசடி செய்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரியை இம்மாதம் (25) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை செய்ய பொலிசாருக்கு உத்தரவிட்ட நீதவான் விசாரணை அறிக்கையை அடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இது இவ்வாறிருக்க  குறித்த வழக்கில் சந்தேக நபரான விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி அண்மையில் வீதியில் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்துடன் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை நுவரெலியா சீத்தா எளிய சீதையம்மன் ஆலயத்தில் வழங்கி உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here