தலவாக்கலை கிறேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் 22 நாட்களாக காணாமல் போயிருந்த மூன்று பாடசாலை மாணவிகளும் பாடசாலை மாணவர் ஒருவரும் இன்று (04) காலி, மெட்டியகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 14 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த தலவாக்கலை, கிறேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவிகள் மூவரும், 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் பொலிஸாரினால் தீவிர தேடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவனும், காணாமல் போன மாணவி ஒருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி எனவும், மற்றைய இரு மாணவிகளும் அவர்களது வீடுகளுக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த ஒரு மாணவனும் மூன்று மாணவிகளும் காலி, மெட்டியகொட பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொலைபேசி தரவுகளை ஆராய்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் பின்னர் நான்கு மாணவர்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா தெரிவித்தார்.
இவர்கள் வேலை தேடி காலி,மெட்டியகொட பகுதிக்கு சென்றதாகவும், பின்னர் அந்த பகுதியிலுள்ள மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டில் தங்கி யிருந்து வேலை தேடி சென்றதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்களை நேற்றைய தினம் (04) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா மேலும் தெரிவித்தார்.
தலவாக்கலை பி.கேதீஸ்