23 ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லையாம்

0
83

ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடும் 38 வேட்பாளா்களில் 23 ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பரப்புரைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றும், சில வேட்பாளர்களுக்கு கட்சி அலுவலகங்கள் கூட இல்லை என்றும் தோ்தல் கண்காணிப்பு அமைப்பான பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எதிா்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தோ்தலுக்கான பரப்புரைகளை முன்னெடுப்பதற்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருக்கின்ற நிலையில், பத்து வேட்பாளர்கள் மாத்திரமே தமது கொள்கைகளை முன்வைக்க நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளதாகவும், சில வேட்பாளர்கள் கட்சி அலுவலகத்தை கூட அமைக்கவில்லை எனவும் சில வேட்பாளர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதையே அறிந்துகொள்ள முடியவில்லை என்றும் பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்திருக்கின்றாா்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு 39 வேட்பாளர்கள் நியமனப் பத்திரம் தாக்கல் செய்த போதிலும், அதில் ஒருவா் மரணமடைந்திருப்பதால், 38 போ் களத்தில் உள்ளனா். இது வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தோ்தல் என்றும், ஆனால், இவர்களில் 10 பேர் மாத்திரமே தற்போது பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தாா்.

இந்த 38 வேட்பாளர்களில் குறைந்தது 15 வேட்பாளர்கள் மாத்திரமே தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தியுள்ளனர். ஏனைய 23 பேரில் ஒருவர்கூட தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தவில்லை என்று ஜனநாயகம், மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

இதுவரை குறைந்தபட்சம் மூன்று வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனு பற்றி பகிரங்க அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை. அவர்கள் வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டு, கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தாலும் அவர்கள் தங்களை வேட்பாளர்களாக எங்கும் அறிமுகப்படுத்தவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

சிலர் தங்கள் வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலங்கங்கள் தவறானவையெனவும் சில அழைப்புகள் பதிலளிக்கப்படாமல் துண்டிக்கப்படுவதாகவும் மஞ்சுள கஜநாயக்க மேலும் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here