ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்ததால், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து பிரசார நடவடிக்கைகளையும் இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி பி.ப 4.30 மணி வரையான காலப்பகுதியினுள் சமூக ஊடகங்களில் பதிவான தேர்தல் விதிமீறல்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சமூக ஊடகங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி வெறுப்புப் பேச்சு தொடர்பாக 247, பொய்த் தகவல்கள் 309, பிரசார நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை ஈடுபடுத்தியமை 13, தவறான செய்திகளை பரப்பியதாக 174 மற்றும் தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு எதிராக 59 இடையிணைப்பிகளும் பகிரப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான ஊக்கப்படுத்தல்களுடன்கூடிய பகிரப்பட்ட பதிவுகளை நீக்குமாறு அறிவித்து மெடா, யூடியூப், டிக்டொக், கூகுள் ஆகிய சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்தவகையில், சமூக ஊடக நிறுவனங்களினால் வெற்றிகரமாக நீக்கப்பட்ட இடையிணைப்பிகளின் எண்ணிக்கை 121 எனவும் சமூக ஊடக நிறுவனங்களினால் நீக்குவதற்கு மறுக்கப்பட்ட இடையிணைப்பிகளின் எண்ணிக்கை 116 எனவும் குறித்த நிறுவனங்களிலிருந்து பின்னூட்டல் தகவல்கள் கிடைக்கப்பெறவுள்ள இடையிணைப்பிகளின் எண்ணிக்கை 565 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து 802 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றை நீக்குவதற்கு சமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.