கடந்த 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரத்தின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாக கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு நிதி சார் உதவியை வழங்குவதற்கான புலமைப்பரிசில் பரீட்சை தற்போது போட்டிமிக்க பரீட்சையாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாறான சம்பவங்களின் மூலம் மாணவர்களே கடுமையாக பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அநீதியை இழைப்பதற்கு யாரேனும் செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர் பதற்றமடையாதிருக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.