நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விஜித ஹேரத்துக்கு உத்தரவு

0
72

நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில், நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை, எதிர்வரும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) காலை உத்தரவிட்டுள்ளது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்ஸ பத்திராஜாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​அந்த வழக்கின் முறைப்பாட்டாளரான விஜித ஹேரத் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

அதன்போது, ​​விஜித ஹேரத் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து, தனது கட்சிக்காரர் இன்று (24) அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதால், சாட்சியமளிப்பதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்றம், விஜித ஹேரத்தை, எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சாட்சியமளிக்க மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

2010 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் விளம்பர நடவடிக்கைகளில் தனியார் நிறுவனமொன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால், அரசாங்கத்திற்கு 64 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகக் கூறி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சந்திரவன்ச பத்திராஜாவுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here