அம்பாறை மாவட்டத்தின்  தமிழ்ப் பிரதிநிதித்துவம் மீண்டும் ஊசலாடுகிறது.

0
134
அம்பாறை மாவட்டத்தின்  தமிழ்ப் பிரதிநிதித்துவம் மீண்டும் ஊசலாடுகிறது. அதாவது 1994 மற்றும் 2020 களில் அம்பாறை மாவட்டத்தில் ஒற்றுமை இன்மையால் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமை போன்று மீண்டும் இம் முறையும் அதே போன்றதொரு துர்ப்பாக்கிய நிலை உருவாகக் கூடிய களநிலவரம் ஒன்று தென்படுகிறது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கான தெரிவு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வேளையில் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது சமூகமாகவுள்ள தமிழர்கள் ஒரு குடையின் கீழ் போட்டியிட வேண்டும். இன்றேல் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பிரதிநிதித்தும் இழக்கப்படும் என்று பொதுக் கட்டமைப்பு உட்பட பல சமூக ஆர்வலர்களும் உரத்த குரலில் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதற்கான முயற்சிகளிலும் பல நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் அவை விழலுக்கு இறைத்த நீராகி விடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஆறு தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஓரணியில் போட்டியிடுவதென கடந்த வியாழக்கிழமை இரவு காரைதீவில் இடம் பெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் 24 மணிநேரத்துள் இலங்கை தமிழரசுக் கட்சி தனிவழி போக தீர்மானித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தங்கள் தலைமையில் ஓரணியில் ஒன்றுசேருமாறு கோரி வேட்புமனு விண்ணப்ப படிவத்தை பெற்றுள்ளது.
அதேபோன்று ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈரோஸ் போன்ற கட்சிகளும் ஏனையவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து..
தமிழரசுக் கட்சியானது ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை ஏற்படுத்தப் போவதாகவும்
இந்த நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பூடாக சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும்  ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் பிரிந்து நிற்பதால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடும் நிலை இருக்கிறது.  எனவே, அங்கு தமிழ் பிரதிநித்துவத்தினை காப்பாற்றுவதற்கான இரண்டு வழிமுறைகளை தமிழரசுக் கட்சிக்கு கூறியிருக்கின்றோம்.  இருதரப்பும் இணைந்து வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போதே அந்த பிரதிநித்துவம் காப்பாற்றப்படும்.
 திருகோணமலையில் வீட்டு சின்னத்திலும், அம்பாறையில் சங்கு சின்னத்திலும் தேர்தலை கேட்கலாம் என தாம்முன்னர் பேசியிருந்தமை  ஏற்றுக்கொள்ள ப்பட்டிருந்தது. தற்போது அனைத்து இடங்களிலும் தமிழரசுகட்சி தனித்து போட்டியிடுவதாக கூறுகிறார்கள்.
அது நடந்தால் இந்த மாவட்டங்களின் ஆசனங்கள் இழக்கப்படும் நிலையே ஏற்படும். இந்த விடயங்களை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஐந்து கட்சிகள் மற்றும் 36ற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் ஒன்றுகூடி இந்த முடிவிற்கு வந்துள்ளார்கள். மாறாக எல்லா இடத்திலும் தாங்களே நிற்கவேண்டும் என்றால் இது பிடிவாதமே. தங்களுக்கு தேசியப் பட்டியலை கூட்டிக்கொள்வதே அவர்களது நோக்கம்.
ஒரு தேசிய பட்டியலுக்காக இரண்டு ஆசனங்களை இழக்கப் போகின்றார்கள். இதுபோல ஒரு முட்டாள்தனமான முடிவு எதுவும் இருக்காது என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து..
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடக் காத்திருக்கும் கட்சிகள்
எமது மாவட்டத் தமிழ் மக்களின் வாக்குகளைக்  கட்சிகளின் தேசியப் பட்டியலுக்கான வாக்குச் சேகரிக்கும் தளமாக மாத்திரம் கருதிக் களமிறங்குவது வேதனை தருகிறது.
மேலும் எமது மாவட்டத்தின் நிலை அறிந்து யாரும் இதயசுத்தியுடன் மாவட்ட மக்களின் நலன் பற்றிச் சிந்திக்கவில்லை மாறாகப் பொய்யாக நாம் விட்டுக்கொடுக்கத் தயார் என கூறுகிறார்கள். ஆனால் தமது கட்சிக்கான வேட்பாளர்களையும் தயார் செய்து அவர்களும் வட்சப் குழுப் பிரச்சாரங்கள் சிறு சிறு சந்திப்புக்களையும் தமக்கான பிரச்சாரங்களையும் செய்து வருகிறார்கள் என்பதுவும் கவலைதான் இருந்தாலும்.
 உங்கள் அனைவரது வருகையினாலும் எமது மாவட்ட ஆசனம் இல்லாமல் போவது உறுதி எனும் தோற்றப்பாடு காணப்படுவதால் அனைவரும் ஒன்றாகி ஒரு ஆசனத்தைக் கைப்பற்றி மாவட்ட மக்களின் நலனைப் பேணாவிட்டாலும் தமக்குக் கிடைக்கும் தேசியப்பட்டியல் ஆசனத்தில் ஒன்றையாவது எமது மாவட்டத்திற்கு வழங்கி எமது மக்கள் வழங்கும் வாக்கிற்கும் அவர்களது நம்பிக்கைக்கும் எதிர்காலத்திற்கும் பாத்திரமாகுங்கள்.
ஜனநாயக போராளிகள் கருத்து..
திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு சின்னத்தில் கேட்க திருகோணமலை கட்சியினர், உடன் பட்டுள்ளனராம்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழரசு கட்சியினர் சங்கு சின்னத்தில் கேட்கமாட்டோம்என்று அடம் பிடிக்கின்றனராம்
இந்த நாட்டு தமிழ்மக்களின் நலன் கருதியும் எதிர்கால சந்ததிக்கு இன்னும் யுத்த வடுவை எதிர்கொள்ள வைக்க கூடாது என்பதற்காகவும் வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தமிழ்மக்களின் பிரதிநிதித்துவத்தை காக்க தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தருணத்தையும் காப்பாத்த செயல்படாது கட்சி ஒற்றுமை என கூறுவது அனைத்தும் போலியான வார்த்தைகளே.
இப்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தம் தமிழ்மக்களின் தனித்துவத்தையும் பிரதிநிதித்துவத்தையும் நிலைநாட்டவும் பாதுகாப்பதற்குமான பாரிய யுத்தம் .
இங்கு யார் பெரிய கட்சி என்பது நோக்கமல்ல  பொதுதேர்தலில் எப்படி யாவது அம்பாறைமாவட்டத்தில் ஒரு சீற்றாவது எடுத்து தமிழர்களுக்கான கள அரசியலை இப்போது எமது போராட்டம்.
 இதனை கவனத்தில் எடுக்காமல்  சிறுபிள்ளைத்தனமாக விதண்டாவாதம் பிடிவாதம் பிடித்து கொண்டீருப்பீர்களானால், இம்முறை அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவம் இழக்க  வாய்ப்புள்ளது .ஆகவே மக்களின் மனங்களை வென்று இனிவரும் காலங்களில் சங்கு சின்னம் வீட்டு சின்னங்களில் தமிழ் அரசியல்வாதிகள் போட்டியிட விரும்புவீர்களானால் நேரம் காலம் இனியும் போதாது ஒன்றுபடுங்கள்.
இல்லையானால், இந்த ஜனாதிபதி தேர்தல் யாரும் எதிர் பாராத அளவு எப்படி மாற்றத்தை ஏற்படுத்தியதோ ( குறைந்தது ஆறுலட்சம் வாக்குகளையும் தமிழ் பொது வேட்பாளர்  எடுக்க முடியாமல் போனதற்கும்,உங்களது ஒற்றுமை இன்மையே காரனம், அதேபோன்று இந்த பாராளுமன்ற தேர்தலிலும் ஒருசீற் எடுக்க முடியாமல் போவதற்கும் நீங்களே காரணகர்த்தாவாக இருப்பீர்கள் அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் வடகிழக்கு மக்கள் தமிழ் அரசியல் வாதிகள் அனைவரையும் முழுமையாக ஓரம் கட்டி ஒரு மூலையில் போட்டுவிட்டு கடிகாரம் இனி எங்கள் சின்னம் எனும் தீர்மானத்துக்கு வந்து இளைய சமூகமும் பழைய சமுகமும் பயணிப்பதை யாராலும் தடுக்க முடியாது போகலாம்
.
இந்த மண்ணிலே,அனைத்து விடுதலைக்காகவும் போராடி தங்களது இளமைக்காலம்,கல்வி,குடும்ப பாசங்களை துறந்து இந்த மக்களுக்காக,சந்ததிக்காக,தங்களது உயிர்களை,துச்சமென நினைத்து பல கொடுரமான களங்களை கண்டு,இந்த மண்னை முத்தமிட்ட ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களையும் இந்த போராட்டத்தில் கொள்ளப்பட்ட,மக்களின் தியாகங்களையும் மனதில் நிறுத்தி மக்களுக்காக செயல்பட முன்வாருங்கள், மக்களை,ஏமாற்றி அமைச்சுப்பதவிகளை பெற்று பணம் பெற்று சொகுசாக வாழ்வதற்காக அல்ல. இவ்வளவு தியாகங்கள் நடந்தது, எங்கள் மக்களை வாழ வைப்பதற்காக..
பல்லாயிரம் போராளிகள் அங்கவீனம் பட்டு இன்றும் அனாதைகளாக
தன் குடும்பத்தை,பிள்ளைகளை காப்பாற்ற,பல மனவடுக்களோடும் அவர்களை திசைமாற வைத்ததும் இந்த அரசியல் தலைமைகள்தான், தமிழ் கட்சிகள் அனைவரும், ஒற்றுமையாக ஒருகுடையின் கீழ் வந்திருந்தால் அசைக்கமுடியாத அரசியல் பலத்துடனும் மக்கள் பலத்துடனும் தமிழ் அரசியல் கட்சிகள் கொடி கட்டி  பறந்திருக்கும். ஊழல் லஞ்சம்,இல்லாத நல்லதொரு நிர்வாக கூட்டமைப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கும் மக்களின் நலனுக்காக போராடிய நாங்கள் இரத்த கண்ணீர்வடிக்கின்றோம் .
எனவே அரசியல் வாதிகளின் தமி்ழ் இனியும் அரசியல் செய்யவேண்டும் என விரும்பினால் கட்சிகளின் நலனுக்காக சிந்திக்காமல் மக்கள் நலனுக்காக சிந்தித்து களத்தில் இறங்கி ஒற்றுமையாக வேலையை முன்னெடுக்கவும்
அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனை தொடர்பு கொள்ள பல தடவைகள் முயற்சித்தபோதும் தொடர்பில் இல்லை.
அக் கட்சியின் பொத்துவில் முன்னாள் உப தவிசாளர் பெ. பார்த்தீபன் கூறுகையில்..
இன்று மக்கள் மனநிலை வேறாகவும் அரசியல்வாதிகளின் மனநிலை வேறாகவும் இருக்கிறது. எமது கட்சி என்றாலும் வேறு யாராவது பிரிந்து நின்று கேட்பார்களானால் நாம் யாருக்கும் வேலை செய்யமாட்டோம். சிலவேளை தேர்தலை  பகிஸ்கரிக்கவும் தயங்க மாட்டோம் என்றார்.
இந் நிலையில் ஏனைய கட்சிகளும் தனிவழி போனால் சுமார் எட்டு அணிகள் அதாவது எண்பது தமிழர்கள் ஒரு ஆசனத்திற்காக போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நிச்சயமாக பிரதிநிதித்துவத்தை இழக்க செய்யும் என்பதை அனைவரும் அறிவர்.
பிரதிநிதித்துவம் தான் குறிக்கோள் என்றால் அனைவரும் இதயசுத்தியுடன் ஒரு அணியில் போட்டியிடுமாறு அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் இறுதி நேர கோரிக்கை விடுத்துள்ளனர்.
 விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here